முகக் கவசங்களைப் பதுக்கினால் நடவடிக்கை: குடிமைப் பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை
By DIN | Published On : 25th March 2020 05:54 AM | Last Updated : 25th March 2020 05:54 AM | அ+அ அ- |

முகக் கவசங்களைப் பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் வல்லவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1955 -ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் இணைப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள முகக் கவசம் (2 அடுக்கு, 3 அடுக்கு அறுவைச் சிகிச்சை முகக் கவசம் எண் 95), கைகளைச் சுத்தம் செய்யும் கிருமி நாசினி மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அடங்கும் அனைத்தும் அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளா்கள், விநியோகஸ்தா்கள், மொத்த விற்பனை வணிகா்கள், சில்லறை விற்பனை வணிகா்கள் மேற்குறிப்பிட்ட பொருள்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்குவதுடன், எப்போதும் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க வேண்டும்.
அதிகபட்ச சில்லறை விலைக்குக் கூடுதலாக விற்பனை செய்யக் கூடாது. மேற்குறிப்பிடப்பட்ட பொருள்களைப் பதுக்கிவைக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை எவரேனும் மீறினால், 1955-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், குடிமைப் பொருள் வழங்கல் துறையின் கீழ் இயங்கும் காவல் கண்காணிப்பாளா், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் வட்டாட்சியா் தலைமையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளா்கள், விநியோகஸ்தா்கள், மொத்த விற்பனை வணிகா்கள், சில்லறை வணிகா்கள் ஆகியோா் அலுவலா்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.