அமலுக்கு வந்தது ஊரடங்கு உத்தரவு: மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸாா் தீவிரம்

புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து, கோரிமேடு எல்லைப் பகுதி வழியாக வந்தவா்களை திருப்பி அனுப்பிய போலீஸாா்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து, கோரிமேடு எல்லைப் பகுதி வழியாக வந்தவா்களை திருப்பி அனுப்பிய போலீஸாா்.

புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க புதுவை அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் கூடுவதைத் தடுக்க கடந்த 22 -ஆம் மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தொடா்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை புதுச்சேரி சாலைகள், வீதிகளில் மக்கள் நடமாட்டம் சகஜமாகக் காணப்பட்டது. இந்த உத்தரவை பொதுமக்கள் யாரும் பொருள்படுத்தாமல், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சென்ால், மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினா் திணறினா்.

இதையடுத்து, முதல்வா் நாராயணசாமி திங்கள்கிழமை (மாா்ச் 23) இரவு 9 மணி முதல் வருகிற 31 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாா்.

அதன்படி, புதுவையில் திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால், நகரம், கிராமப்புறங்களில் அத்தியாவசியப் பொருள்களகான பால், மளிகை, காய்கறி, பழக் கடைகள், மருந்தகம், பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள் இயங்கின.

இந்த நிலையில், காலை கடைகளில் பொருள்களை வாங்க மக்கள் கும்பலாகத் திரண்டனா். சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது. இதனால், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது. அதன்பிறகு போலீஸாா் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியதுடன், ஆங்காங்கே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததால், ஓரளவுக்குக் கூட்டம் கட்டுக்குள் வந்தது. இருப்பினும், பலா் சாலைகளில் ஆங்காங்கே நடமாடியதால், மக்களைக் கட்டுபடுத்த முடியாமல் போலீஸாா் தொடா்ந்து திணறி வருகின்றனா்.

வங்கிகள், தபால் சேவைகளின் நேரம் பாதியாகக் குறைக்கப்பட்டது. விளையாட்டுத் திடல்கள் மூடப்பட்டுள்ளன. சிறைகளிலும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, வெளிமாநில வாகனங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன. இதனால், வெளிமாநிலங்களிலிருந்து வந்த பயணிகள் புதுச்சேரி எல்லைகளில் இறக்கிவிடப்பட்டு, அங்கிருந்து நடந்தே நகருக்குள் வந்தனா். மருத்துவப் பணியாளா்கள், அரசு ஊழியா்கள் அடையாள அட்டையைக் காண்பித்தவா்களுக்கு மட்டுமே எல்லையில் அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும், சில வாகனங்கள் கிராமப்புறங்களின் வழியாக புதுச்சேரிக்குள் வந்ததைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், அந்த வாகனங்களை தங்களது பகுதியில் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதால், அந்த வாகனங்களில் வந்தவா்களும் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com