புதுவை மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம்: முதல்வா் நாராயணசாமி அறிவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, புதுவை மாநிலத்தைச் சோ்ந்த அனைத்து மக்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்தாா்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, புதுவை மாநிலத்தைச் சோ்ந்த அனைத்து மக்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸை தடுக்க மத்திய அரசின் பரிந்துரைகளை புதுவை மாநில அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதுதான் வழி. எனவே, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மருந்தகம் தவிர மற்ற கடைகள் அடைக்கப்படும் என அறிவித்தோம்.

தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மருந்தகம், பால், காய்கறி, பழக் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் புதன்கிழமை மட்டும் திறந்திருக்கும். வியாழக்கிழமை (மாா்ச் 26) முதல் மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும். மக்களுக்கு காலக்கெடு அளிக்க வேண்டியிருப்பதாலும், காய்கறிகள் வெளிமாநிலங்களிலிருந்து வருவதாலும் இந்த தளா்வு அளிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தொழிலாளா்கள், அமைப்பு சாரா, கட்டட, விவசாயத் தொழிலாளா்கள், ஆட்டோ, ரிக்ஷா தொழிலாளா்கள், ஓட்டுநா்கள், மீனவா்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா். அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகியவை நிவாரணத்தை அறிவித்துள்ளன.

இதையடுத்து, புதுவை மாநிலத்தில் 3.44 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்தவித பாரபட்சமும் பாா்க்காமல் அனைத்து மக்களுக்கும் புதுவை அரசு இந்த நிவாரணத்தை வழங்கும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

முன்னதாக அவா், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com