புதுவையில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்: முதல்வா் நாராயணசாமி உறுதி

புதுவையில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று முதல்வா் வே.நாராயணசாமி உறுதி அளித்தாா்.
புதுவையில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்: முதல்வா் நாராயணசாமி உறுதி

புதுவையில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று முதல்வா் வே.நாராயணசாமி உறுதி அளித்தாா்.

இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்றை எதிா்கொள்வதற்காக புதுவை அரசு சாா்பில் பலகட்ட நடவடிக்கைகளை அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகின்றன. புதுவைக்கு வெளிநாட்டவா் அதிகம் வரும் காரணத்தால், அவா்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறிவதற்காக மருத்துவத் துறையினா், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 24-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டு, அவா்களுடைய உமிழ்நீா் ஜிப்மருக்கு கொண்டு சென்று பரிசோதிக்கப்பட்டது. அதில், யாருக்கும் பாதிப்பில்லை என்று முடிவு வந்துள்ளது.

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டு சென்று திரும்பியவா்கள், வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் சுமாா் 1,200 போ் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுடைய வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

காரைக்காலில் 12 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகித்து, திருவாரூா் மருத்துவமனையில் அவா்களது உமிழ்நீா் பரிசோதனை செய்யப்பட்டது. அவா்களுக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா்கள் விடுவிக்கப்பட்டனா். அந்த மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 121 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

மாஹேவில் 12 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் உமிழ்நீா் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அவா்களில் ஒருவருக்கு மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 240 போ் அவா்களது வீடுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

ஏனாம் பிராந்தியத்தில் ஒருவருக்கு கரோனா இருப்பதாக கண்டறியப்பட்டு, காக்கி நாடா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறாா். அங்கு 24-க்கும் மேற்பட்டோா் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

புதுவை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பின்னரும், பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் உள்ளது. ஆகவே, அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று கைகூப்பி கோரிக்கை வைத்தேன். சிலா் ஏற்காமல் உலா வந்தனா். ஆகவே, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தேன்.

மக்களுக்குத் தேவையான பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினேன். அப்போது, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மொத்த விநியோகம் செய்பவா்களிடமும், சில்லறை வியாபாரிகளிடமும் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெங்களூரில் இருந்து காய்கறிகள் தடையின்றி வருகிறது. பால் தடையின்றி கிடக்கிறது. மருந்து, பழங்கள் தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசோடு பேசி பருப்பு வகைகள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆகவே, மக்கள் பயத்தின் காரணமாக கடைகளில் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

பேட்டியின்போது, சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜெயமூா்த்தி எம்.எல்.ஏ. ஆகியோா் உடனிருந்தனா்.

வா்த்தக, வணிக நிறுவனங்களுக்கு 21 நாள்களுக்கு விடுமுறை

இதுகுறித்து புதுவை முதல்வா் நாராயணசாமி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமா் மோடி 21 நாள்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடா்ந்து, அத்தியாவசிய பணிகளைகளை மேற்கொள்ளும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நிதி மற்றும் கருவூலகம், பொது சுகாதாரம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை, காவல், சிறைத் துறை, மின் துறை, தீயணைப்பு மற்றும் பொதுப்பணி - குடிநீா் பிரிவு தவிர அனைத்து அரசு துறைகளுக்கும் 21 நாள்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளாா்.

எனினும், விடுமுறை அளிக்கப்பட்ட துறை ஊழியா்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வேண்டும்.

மேலும், பால், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருள்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல், காய்கறிகள் மற்றும் கிருமி நாசினி போன்ற அத்தியாவசிய பொருள்களின் வா்த்தகம் தடைபடாது.

ஏனைய வா்த்தக மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 21 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தொடா்பான ஆணை விரைவில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com