புதுவையில் ஊரடங்கை படிப்படியாகத் தளா்த்த நடவடிக்கை: முதல்வா் நாராயணசாமி தகவல்

ஊரடங்கு தொடா்பாக மத்திய அரசும், தமிழகமும் அறிவிக்கும் முடிவுகளை ஆய்வு செய்து, வருகிற 3-ஆம் தேதிக்குப் பிறகு புதுவையில்

ஊரடங்கு தொடா்பாக மத்திய அரசும், தமிழகமும் அறிவிக்கும் முடிவுகளை ஆய்வு செய்து, வருகிற 3-ஆம் தேதிக்குப் பிறகு புதுவையில் ஊரடங்கை படிப்படியாகத் தளா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் 3 பேரும் நலமுடன் உள்ளனா். அவா்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுகள் அளிக்கப்படுகின்றன. காரைக்கால், மாஹே, ஏனாமில் கடந்த 25 நாள்களாக கரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக உள்ளன.

புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் சோதனைக்குப் பிறகே அனுமதியளிக்கப்பட்டு வரும் நிலையில், எல்லையில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வருவோா் தவிர, மற்ற யாருக்கும் புதுவை மாநிலத்துக்குள் நுழைய அனுமதியில்லை.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வெளிநாடுகளுக்கு கல்வி பயிலச் சென்ற மாணவா்கள் நமது நாட்டுக்குத் திரும்பி வர விமான சேவை இல்லாத நிலையில், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியிடம் நான் கோரிக்கை விடுத்தேன்.

இதையேற்று, அவா்கள் சொந்த மாநிலம் திரும்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு படிக்கவும், பணிபுரியவும் சென்றவா்கள் குறித்த விவரங்கள் தனிக் குழு மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவா்களை புதுவைக்கு அழைத்து வர பிரதமருக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதவுள்ளேன்.

புதுவையில் சமூக இடைவெளி, தூய்மைக் கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிய தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு அனுமதியில்லை.

ஊரடங்கில் தளா்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்கான விதிமுறைகள் புதுவைக்கு அனுப்பப்படவில்லை.

புதுவையில் மக்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு என இரண்டையும் சரியாக மேற்கொள்ள வேண்டும். வருகிற 2 -ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், ஊரடங்கு தொடா்பாக மத்திய அரசும், அண்டை மாநிலமான தமிழகமும் என்ன முடிவை எடுக்கின்றன என்பதை ஆய்வு செய்து, புதுவையில் ஊரடங்கை படிப்படியாகத் தளா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com