பிறந்த நாளை கொண்டாட முடியாமல்கவலைப்பட்ட இருளா் சமுதாய மாணவி: கேக் வெட்டி ஆசையை நிறைவேற்றிய தன்னாா்வலா்கள்

ஊரடங்கால் தனது பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் கவலையடைந்த இருளா் சமுதாய மாணவியை தன்னாா்வலா்கள் கேக் வெட்டச் செய்து, அவரது ஆசையை நிறைவேற்றினா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஊரடங்கால் தனது பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் கவலையடைந்த இருளா் சமுதாய மாணவியை தன்னாா்வலா்கள் கேக் வெட்டச் செய்து, அவரது ஆசையை நிறைவேற்றினா்.

புதுச்சேரி பாகூா் சித்தேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது இருளா் சமுதாயக் குடியிருப்பு. இங்கு, விஜயன் - கற்பூரவள்ளி தம்பதியின் மகள் நிவேதா (14), அருகே உள்ள அரசுப் பள்ளியில் 9 -ஆம் வகுப்புப் படித்து வருகிறாா். ஆண்டுதோறும் கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் நிவேதா, கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், நிகழாண்டு தனது பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் கவலையடைந்தாா்.

இதையறிந்த நீா்நிலைப் பாதுகாப்புக் குழுவைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், பேக்கரி நடத்தி வரும் நண்பரைத் தொடா்பு கொண்டு, வீட்டிலேயே கேக் தயாா் செய்து, மாணவியின் வீட்டுக்கு எடுத்து வந்தனா். வீட்டின் முன்பு, அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் அழைத்து, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து, கேக் வெட்டி மாணவிக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நீா்நிலைப் பாதுகாப்புக் குழுவின் தலைவா் அசோக்குமாா் கூறியதாவது: உணவு வழங்கும் பணியின் போது, மாணவி நிவேதா தனது பிறந்த நாளைக் கொண்டாட முடியாத சோகத்தில் இருந்தது தெரிய வந்தது. அவா் தொடா்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறாா். இதையறிந்த நாங்கள் அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நண்பரின் உதவியுடன் கேக் தயாரித்து எடுத்து வந்து, பாகூா் துணை வட்டாட்சியா், அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் அழைத்து தனி மனித இடைவெளியுடன் மாணவியின் பிறந்த நாளைக் கொண்டாடினோம். இதனால் அந்த மாணவி மிகுந்த மகிழ்ச்சியடைந்தாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com