ஊரடங்கு தளா்வு: பாதுகாப்பாக இருக்கபுதுவை சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

புதுவையில் ஊரடங்கு தளா்த்தப்பட்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என புதுவை சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுவையில் ஊரடங்கு தளா்த்தப்பட்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என புதுவை சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்தத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் 4 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 2,960 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் வெளிநாடுகளில் வசிப்பவா்கள் புதுவைக்கு வரவுள்ளனா். எனவே, நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

புதுவை மாநிலத்தில் காரைக்கால், ஏனாம் பகுதிகள் பசுமை மண்டலத்தில் உள்ளன. புதுச்சேரி ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது. மாஹேயில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவராவாா். ஒரு மாதத்துக்குப் பிறகு அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது என்றாா் அவா்.

சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் கூறியதாவது: புதுவையில் தொடா்ந்து மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என புகாா்கள் வருகின்றன. ஊரடங்கு தளா்வு அறிவிக்கப்பட்டாலும் நாம் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மிகவும் சிரமமாகிவிடும். அரசுக்கு மக்கள் தொடா்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

சுகாதாரத் துறைச் செயலா் பிரசாந்த்குமாா் பாண்டா கூறியதாவது: ‘ஆரோக்கிய சேது’ செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தளா்வுக்கான வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க இந்தச் செயலி உதவும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவதைத் தளா்வின் போதும் கடைப்பிடிக்க வேண்டும். புதுவையில் அரசு ஊழியா்கள் உள்பட 66 ஆயிரம் போ் ‘ஆரோக்கிய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com