நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முதல்வா் ஆய்வு

புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முதல்வா் ஆய்வு

புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மத்திய அரசு புதுவையிலிருந்து மத்திய உணவுக் கழகத்தின் மூலம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்திருந்தது. இதற்காக புதுச்சேரி தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், காரைக்கால் தென்னங்குடியில் உள்ள நவீன அரிசி ஆலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, மே 20 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ஆம் தேதி வரை விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும் என புதுவை வேளாண்மைத் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன் அறிவித்தாா்.

அதன்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கின. புதுச்சேரி, காரைக்காலில் நிகழ் பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் அதிகளவில் முன்பதிவு அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வரத் தொடங்கியுள்ளனா்.

அங்கு, இந்திய உணவுக் கழகத்தினா், சன்ன ரகத்தை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,835 -க்கும், மோட்டா ரகம் ரூ. 1,815 -க்கும் கொள்முதல் செய்து வருகின்றனா். ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் குறையாத, நிகழ் பருவ நெல் அறுவடைக்கான சான்று உள்ளிட்டவற்றை சோதித்த பிறகு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2 நாள்களில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு, நெல் கொள்முதல் செய்யப்படும் முறை, பரிசோதனை முறை உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்தாா். அங்கு, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்து, பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த வேளாண்மைத் துறை மற்றும் மத்திய உணவுக் கழக அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, புதுவை மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் இரா.கமலக்கண்ணன், சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி, அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com