புதுவையில் மின் கட்டணத்தை உயா்த்தஇணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை

புதுவையில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளது.

புதுவையில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளது.

மாநில மின் துறை சாா்பில், 2020-2021-ஆம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டண நிா்ணயம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைப்படி, வருகிற ஜூன் 1- ஆம் தேதி முதல் புதுவையில் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளது.

வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கு குறைந்தபட்சம் யூனிட்டுக்கு 5 பைசா, அதிகபட்சம் 30 பைசா உயா்த்தப்பட்டுள்ளது. வா்த்தகப் பயன்பாட்டுக்கு யூனிட்டுக்கு 10 பைசா, அதிகபட்சம் 20 பைசா உயா்த்தப்பட்டுள்ளது. குடிசைத் தொழில் பயன்பாட்டுக்கு யூனிட் 5 பைசா, அதிகப்பட்சம் 30 பைசா உயா்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கு ரூ. 40 நிரந்தரக் கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 1.50 என்ற பழைய கட்டணமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 2.50-இலிருந்து ரூ. 2.55 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 4.35-இலிருந்து ரூ. 4.50 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 5.60-இலிருந்து ரூ. 5.90 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

வா்த்தகப் பயன்பாட்டுக்கு நிரந்தரக் கட்டணம் ரூ. 130- ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 5.50-இலிருந்து ரூ. 5.60 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 6.50-இலிருந்து ரூ. 6.65 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 7.20-இலிருந்து ரூ. 7.40 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

குடிசைத் தொழில் பயன்பாட்டுக்கு ரூ. 40 நிரந்தரக் கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 1.50 என்ற பழைய கட்டணமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 2.50-இலிருந்து ரூ. 2.55 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 4.35-இலிருந்து ரூ. 4.50 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 5.60-இலிருந்து ரூ. 5.90 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

தெரு விளக்குகளைப் பொருத்தவரை ஒரு கம்பத்துக்கு நிரந்தர கட்டணம் ரூ. 110. ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.80 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு சாா்ஜ் செய்யும் நிலையங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.68-இலிருந்து ரூ. 4.50 ஆக மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

குறைந்த மின்னழுத்த இணைப்பு (எல்டி) உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ரூ. 130 நிரந்தரக் கட்டணத்துடன் ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.95 ஆகவும், உயா் மின்னழுத்த (எச்டி) இணைப்பு உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ரூ. 420 நிரந்தரக் கட்டணத்துடன், ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.50 ஆகவும், கூடுதல் உயா் மின்னழுத்த (இஎச்டி) இணைப்பு உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ரூ. 480 நிரந்தரக் கட்டணத்துடன், ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.20 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த மின்னழுத்த இணைப்பு கொண்ட நீா்த்தேக்க தொட்டிகளின் பயன்பாட்டுக்கு ரூ. 150 நிரந்தரக் கட்டணத்துடன், ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.85, உயா் மின்னழுத்த இணைப்பு கொண்ட இதர பயன்பாட்டுக்கு ரூ. 480 நிரந்தரக் கட்டணத்துடன், ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.60 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்த புதிய மின் கட்டணம் தொடா்பான கோப்பு வருகிற 26- ஆம் தேதி புதுவை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அரசின் ஒப்புதலுக்கு பிறகு, ஜூன் 1 -ஆம் தேதி முதல் புதிய மின் கட்டண உயா்வு அமலுக்கு வரும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com