மதவழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிகோரி பிரதமர் மோடிக்கு புதுவை முதல்வர் கடிதம்

புதுவையில் ஜூன் 1 முதல் மதவழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மதவழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிகோரி பிரதமர் மோடிக்கு புதுவை முதல்வர் கடிதம்

புதுவையில் ஜூன் 1 முதல் மதவழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,000-ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல புதுவையின் அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூரில் கரோனா தொற்று அதிகம் இருக்கிறது.
இருப்பினும் புதுச்சேரியில் கரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் கூட இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டிவிட்டது. நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், 75 சதவீதம், மும்பை, தில்லி, காந்திநகர், சென்னை, இந்தூர், கொல்கத்தா ஆகிய நகர பகுதிகளில் தான் இருக்கிறது. 

எனவே, புதுச்சேரி நகர பகுதியில் மிகுந்த கவனத்துடன் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு உத்தரவிட்டதால் தான், கோயில்,கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டன. இதன் மூலம் கரோனா பரவுவது கடந்த இரண்டு மாதங்களாக தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் மதவழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளிக்கும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். புதுவையில் மின்துறையை தனியாருக்கு விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரம் மத்திய, மாநில அரசு பட்டியலில் உள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இன்றி இதை செய்ய இயலாது. முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுவை, தில்லி ஆகியவை சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங்கள். புதுவையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், தொழில்நிறுவங்களுக்கு மின்சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்கு போடும் சட்டத்தை புதுவைக்கும் சேர்த்து பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களவை, மாநிலங்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்றி, மாநிலங்கள் ஒத்துக்கொண்டால் மட்டுமே அதை அமல்படுத்த முடியும். மின்துறையை தனியார்மயப்படுத்தும் சட்டத்தை புதுவையில் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மின்துறை தனியார்மயமானால் புதுவையில் விவசாயிகள், ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். புதிய தொழிற்சாலைகள் வருவது பாதிக்கப்படும்.

எனவே, இதை முழுமையாக எதிர்ப்போம். புலம்பெயர் தொழிலாளர்களை பொருத்தவரையில் புதுவையில் இருந்து உத்தரபிரதேசம், பிகார் மாநிலங்களுக்கு 1,350 பேர், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு 1,340 பேரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய், அபுதாபி, கத்தார் உள்ளிட்டவற்றில் இருக்கும் புதுவை மக்களை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com