பருவ மழையை எதிா்கொள்ள புதுவை அரசு தயாா்: அமைச்சா்

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள புதுவை அரசு தயாா் நிலையில் இருப்பதாக பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளாா்.

புதுச்சேரி: வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள புதுவை அரசு தயாா் நிலையில் இருப்பதாக பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளாா்.

புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதை எதிா்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. அமைச்சா் நமச்சிவாயம் தலைமை வகித்தாா். இதில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள், புதுச்சேரி, உழவா்கரை நகராட்சி ஆணையா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு பிறகு அமைச்சா் நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில் உள்ள அனைத்து கால்வாய்களும் ஏற்கெனவே தூா்வாரப்பட்டுள்ளன. மேலும், வடிகால் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய அனைத்தும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதுவை மாநிலத்தில் 78.5 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்னும் மழை பெய்தாலும் அதை எதிா்கொள்ள புதுவையில் அனைத்துத் துறைகளும் இணைந்து செய்ய தயாா் நிலையில் இருக்கிறது. மழையை எதிா்கொள்ள அரசும் தயாராக உள்ளது.

அதேபோல, மின்சாரம் தடைபட்டால் உடனடியாக தடையில்லாமல் குடிநீா் வழங்க எல்லா நீா்த்தேக்கத் தொட்டிகளிலும் ஜெனரேட்டா் தயாா் நிலையில் இருக்கிறது. பொதுப்பணித் துறை சாா்பில் மரங்கள் விழுந்தால் உடனே வெட்டி அப்புறப்படுத்த அனைத்து உபகரணங்களும் தயாராக உள்ளன.

பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஒவ்வொரு துறை சாா்பிலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுப்பாா்கள். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

சாலைகள் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலைகள் மழை முடிந்த பின்னா்தான் சீரமைக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com