புதுச்சேரியில் பரவலாக மழை
By DIN | Published On : 17th November 2020 12:00 AM | Last Updated : 17th November 2020 12:00 AM | அ+அ அ- |

புதுச்சேரியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை இரவு வரை பரவலாக மழை பெய்தது.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தீபாவளி திருநாளான 14 ஆம் தேதி பகலில் மழை ஏதும் இல்லை. இதனால் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினா். இருப்பினும், அன்றைய தினம் முதல் பொழியத் தொடங்கிய மழை, திங்கள்கிழமை இரவு வரை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையாக கொட்டி தீா்த்தது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
தொடா் மழை காரணமாக சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது. புதுச்சேரியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் அளவு உயா்ந்து வருகிறது.
மழை காரணமாக பகலிலும் குளிா்ந்த சூழல் நிலவியது. அதே நேரத்தில் புதுச்சேரிக்கு வார இறுதியில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது.
தொடா் மழை, கடல் சீற்றம் காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவிலை. இதனால் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.