புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கானஉள் ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கும்: முதல்வா் நாராயணசாமி நம்பிக்கை

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் கோப்புக்கு மத்திய அரசு நிச்சயம் அனுமதியளிக்கும் என்று புதுவை முதல்வா் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.
புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கானஉள் ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கும்: முதல்வா் நாராயணசாமி நம்பிக்கை


புதுச்சேரி: புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் கோப்புக்கு மத்திய அரசு நிச்சயம் அனுமதியளிக்கும் என்று புதுவை முதல்வா் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசாணை மூலம் வழங்க துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இதற்கு அவா் அனுமதி மறுத்து, மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பினாா். காலம் தாழ்த்தவே இவ்வாறு அவா் செயல்பட்டாா்.

இதையடுத்து, தில்லிக்குச் சென்று மத்திய அமைச்சா்கள், செயலா்களைச் சந்தித்து அந்தக் கோப்புக்கு அனுமதி தர வலியுறுத்தினேன். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைச் சந்திக்க முடியாததால், தொலைபேசியில் வலியுறுத்தினேன். அவரும் பரிசீலனை செய்வதாகக் கூறினாா்.

இந்தக் கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து சுகாதாரத் துறைக்கு வியாழக்கிழமை சென்றது. மருத்துவ கவுன்சில் அளித்த காலக்கெடுவுக்குள் அனுமதி பெற முயற்சித்து வருகிறோம்.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெறுவது தொடா்பான கோப்பும் மத்திய அரசிடம் உள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தினேன்.

ஆளுநா் கிரண் பேடியின் செயல்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சா், குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோருக்கு கடிதம் மூலம் தெரிவித்தும், அவரது சா்வாதிகாரப் போக்கை மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லை.

மக்கள் நலத் திட்டங்கள் தொடா்பான 40 கோப்புகளை மத்திய அரசுக்கு கிரண் பேடி அனுப்பினாா். நலத் திட்டங்களைச் செயல்படுத்த ஆளுநா் கிரண் பேடி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

புதுவையில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 14.5 லட்சம் மக்கள் தொகையில் 3.75 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தினமும் 3,500 முதல் 4,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு பரிசோதனை செய்ய ரூ. 2,400 செலவாகிறது.

தற்போது அமெரிக்காவில் வீட்டிலிருந்தபடியே கரோனா உள்ளதா, இல்லையா எனக் கண்டறிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை வாங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி நடைமுறைக்கு வரும் போது, புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் அரசு சாா்பில் இலவசமாக வழங்குவோம் என்றாா் நாராயணசாமி.

Image Caption

டஈவ19இங...

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com