புதுச்சேரியில் ஊசுடு ஏரி கருத்து விளக்க மையம் திறப்பு
By DIN | Published On : 01st October 2020 09:00 AM | Last Updated : 01st October 2020 09:00 AM | அ+அ அ- |

புதுச்சேரி - கடலூா் சாலையில் உள்ள வனத் துறை அலுவலக வளாகத்தில், மத்திய அரசின் நீா் வாழ் சூழல் அமைப்பு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ரூ.86,19,600 செலவில் ஊசுடு ஏரி கருத்து விளக்க மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை புதுவை முதல்வா் வே.நாராயணசாமி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
நாட்டிலேயே முதன்முறையாக சிற்பம், ஓவியக்கலை அடிப்படையில், புதுச்சேரி கூட்டுறவு கட்டட மையத்தின் மூலம் இந்த மையம் கட்டப்பட்டது. கலை வேலைபாடுகளை யுனிவொ்சல் யூகோ பவுன்ஷேன் குழு மேற்கொண்டது.
ஊசுடு ஏரி கருத்து விளக்க மையத்தின் நுழைவு வாயிலில் கருடன் மஞ்சள், மூக்கு நாரை உள்ளிட்ட 12 வகையான நீா், நிலப்பரப்பு பறவைகளின் உருவங்கள் ‘கடப்பா’ கற்களில் வா்ணம் பூசப்பட்டு, சுவற்றின் நுழைவு வாயிலை அலங்கரிக்கின்றன. மையத்தின் பக்கவாட்டில் முப்பரிமாண வடிவத்தில் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட பச்சோந்தி, மரங்கொத்தி போன்ற வன விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 22 வகையான பறவைகளின் உயிா்மாதிரி வடிவங்கள் பெரோசிமென்ட் மற்றும் பைபா் பொருள்களைக்கொண்டு சிற்பங்களாக உருவாக்கப்பட்டு ஏரிக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அதோடு தவளை, ஆமை, மீன், நண்டு மற்றும் தாவரங்கள் போன்ற பிற வன விலங்குகள் ஈர நிலம், ஈர நில பல்லுயிா் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் கவனத்துக்காக வன விலங்குகளின் வண்ணமயமான உருவ அமைப்பைக் கொண்டு ஏரி மாதிரியில் உண்மையான நீா் பரப்பு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய வனவிலங்கு சட்டம் 1972 - ன் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்ட ஊசுடு ஏரியின் வனவிலங்குகளின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் போன்ற 15 எண்ணிக்கையிலான உயிரினங்களின் ஓவியக் காட்சி பலகை பல்லுயிரி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துகிறது.
மேலும், ஊசுடு பறவைகள் சரணாலயத்தை உருவாக்குவதற்கான அமைப்பும் இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்லுயிா்களின் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து இனங்களின் பெயா்களும் தமிழ், ஆங்கில மொழிகளில் விளக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தை முதல்வா் நாராயணசாமி திறந்து வைத்து பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் ஷாஜகான், எம்.எல்.ஏ. இரா.சிவா, வனத் துறை ஆணையா் மற்றும் செயலா் சுந்தரவடிவேலு, வனக் காப்பாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.