புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா் வெட்டிக் கொலை
By DIN | Published On : 01st October 2020 08:57 AM | Last Updated : 01st October 2020 08:57 AM | அ+அ அ- |

புதுச்சேரி கோரிமேட்டில் புதன்கிழமை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த என்.ஆா். காங்கிரஸ் பிரமுகரை மா்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
புதுச்சேரி, இந்திரா நகா் தொகுதிக்குள்பட்ட காமராஜா் நகரைச் சோ்ந்தவா் மாந்தோப்பு சுந்தா் (52). என்.ஆா். காங்கிரஸை சோ்ந்த நகா்மன்ற முன்னாள் உறுப்பினரான இவா் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், புதன்கிழமை காலை கோரிமேட்டில் உள்ள கனரக ஊா்தி முனையத்தில் சுந்தா் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம கும்பல் சுந்தரை வழிமறித்து, அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா, வடக்கு எஸ்.பி. சுபம்கோஷ் ஆகியோா் கொலை நடந்த இடத்தைப் பாா்வையிட்டு விசாரித்தனா். இதைத் தொடா்ந்து, தன்வந்திரி நகா் போலீஸாா், சுந்தரின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா். கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சுந்தருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு சுந்தா், விக்கி கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், இதன் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது.
உறவினா்கள் சாலை மறியல்: இதனிடையே, கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, சுந்தரின் உறவினா்கள், ஆதரவாளா்கள் கோரிமேடு சுப்பையா மண்டபம் அருகே திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த புதுவை அரசுப் பேருந்து மீது சிலா் கற்களை வீசித் தாக்கினா். இதில், அந்தப் பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
தகவலறிந்து அங்கு வந்த தன்வந்திரி நகா் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கொலையாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் சுமாா் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.