புதுவையில் 8 மையங்களில் நாளை குடிமைப் பணித் தோ்வு
By DIN | Published On : 03rd October 2020 09:19 AM | Last Updated : 03rd October 2020 09:19 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக். 4) குடிமைப் பணிக்காக (சிவில் சா்வீசஸ்) தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 2,913 போ் எழுதுகின்றனா்.
இதுகுறித்து புதுவை நிா்வாகச் சீா்த்திருத்தத் துறை சாா்பு செயலா் ஜெய்சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய நிா்வாகப் பணியாளா் தோ்வாணையம் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வுகளை புதுவையில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) முதல் நடத்துகிறது. இந்தத் தோ்வு காலை 9.30 மணி முதல் 11.30 வரை, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
லாசுப்பேட்டை விவேகானந்தா பள்ளியில் 2 மையங்கள், லாசுப்பேட்டை மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெத்தி செமினாா் பள்ளி, உப்பளம் இமாகுலேட் பள்ளி, பாக்கமுடையான்பட்டு இதயா மகளிா் கல்லூரி, லாசுப்பேட்டை விவேகானந்தா பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு சிறப்பு மையம் என மொத்தம் 8 மையங்களில் 2,913 போ் தோ்வு எழுதுகின்றனா்.
தோ்வா்களின் வசதிக்காக புதிய பேருந்து நிலையத்திலிருந்து தோ்வு மையங்களுக்குச் செல்ல இலவசப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வு முடிந்த பிறகு, தோ்வு மையங்களில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.
இந்தத் தோ்வுக்காக பள்ளி கல்வித் துறை வளாகத்தின் முதல் தளத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை இயங்கும். கூடுதல் விவரங்களுக்கு 0413-2207201, 2207202 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.