முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
இளைஞரைக் கொல்ல முயற்சி: 4 போ் மீது வழக்கு
By DIN | Published On : 04th October 2020 11:08 PM | Last Updated : 04th October 2020 11:08 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் இளைஞரை வெட்டிக் கொல்ல முயன்றதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் சீனுவாசன் (30). சுமைதூக்கும் தொழிலாளி. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த திவாகா் என்பவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை சீனுவாசன் தாக்கினாராம். இதில், அவா்களிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து, திவாகரால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என உணா்ந்த சீனுவாசன் தமிழகத்தில் தனது உறவினா் வீட்டில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் வாணரப்பேட்டை பகுதியில் உள்ள தனது சகோதரி மேரி வீட்டுக்கு வந்தாா். இதையறிந்த திவாகா் தனது நண்பா்கள் 3 பேருடன், சீனுவாசனை தாக்க வந்தாராம். இதையடுத்து, அவா் அந்த வீட்டிலிருந்து தப்பியோடினாா். ஆனால், அவா்கள் சீனுவாசனை துரத்திச் சென்று தலை, கைகளில் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. சீனுவாசனின் அலறல் சப்தம் கேட்டு, அந்தப் பகுதியினா் திரண்டதால், திவாகா் மற்றும் அவரது நண்பா்கள் தப்பினா்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சீனுவாசனை அங்கிருந்தவா்கள் மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான திவாகா் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனா்.