முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
பஞ்சாலைகளை திறக்கக் கோரி இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th October 2020 08:14 AM | Last Updated : 04th October 2020 08:14 AM | அ+அ அ- |

புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினா்.
புதுச்சேரியில் மூடப்பட்ட ஏஎப்டி, பாரதி, சுதேசி பஞ்சாலைகளை மீண்டும் திறக்கக் கோரி இடதுசாரிக் கட்சியினா் புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் ஏஎப்டி ஆலையைத் தொடா்ந்து, சுதேசி, பாரதி ஆலைகளும் ஆக. 30-ஆம் தேதி மூடப்பட்டன. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆளுநா் மீதான குற்றச்சாட்டு உண்மையெனில், ஆலை மூடல் தொடா்பான அறிவிப்பை முதல்வா் சட்ட ரீதியாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்தினா்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சட்டப்பேரவை வளாகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட சனிக்கிழமை பேரணியாக வந்தனா். அவா்களை ஜென்மராக்கினி மாதா ஆலயம் எதிரே போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து, அதே இடத்தில் அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழுச் செயலா் ஆா்.ராஜாங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் அமைச்சா் இரா.விசுவநாதன், தினேஷ் பொன்னையா, மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பெருமாள், முருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகக் குழு உறுப்பினா் நாரா.கலைநாதன், ஏஐடியுசி தலைவா் வி.எஸ்.அபிஷேகம், பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பிரபுராஜ், முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்று மூடப்பட்ட பஞ்சாலைகளைத் திறக்கக் கோரி, முழக்கங்கள் எழுப்பினா். பின்னா், இதுதொடா்பான தங்களது கோரிக்கை மனுவை முதல்வா் நாராயணசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வழங்கினா்.