முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரியில் மீண்டும் இயங்கிய ஞாயிறு சந்தை
By DIN | Published On : 04th October 2020 11:01 PM | Last Updated : 04th October 2020 11:01 PM | அ+அ அ- |

புதுச்சேரியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஞாயிறு சந்தை மீண்டும் இயங்கியது. இதனால், மக்கள் மகிழ்ச்சியுடன் பொருள்கள் வாங்கிச் சென்றனா்.
கடந்த மாா்ச் மாத இறுதியில் நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சில மாதங்கள் கழித்து பொது முடக்கத்தில் படிப்படியாகத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஆனால், புதுச்சேரியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ஞாயிறு சந்தை (சண்டே மாா்க்கெட்) மட்டும் இயங்காமல் இருந்தது. இதனால், ஞாயிறு சந்தையை நம்பியுள்ள வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். தொடா்ந்து, சந்தை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் உள்ள வியாபாரிகள் ஞாயிறு சந்தையில் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனா். ஞாயிறு சந்தையை நம்பி 816 வியாபாரிகள் உள்ளனா். இவா்களில் புதுச்சேரியைச் சோ்ந்த 649 பேரும், சென்னை, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 167 பேரும் அடங்குவா்.
இவா்களில் புதுச்சேரியைச் சோ்ந்த வியாபாரிகள் மட்டும் கடைகளை அமைத்திருந்தனா். வெளியூா் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
குறைந்த கடைகளே அமைக்கப்பட்டிருந்ததால், வழக்கமான ஞாயிறு சந்தை போல காட்சியளிக்கவில்லை. இருந்த போதும் புதுவைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்கள் ஆா்வத்துடன் பொருள்களை வாங்கிச் சென்றனா்.