முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரியில் 8 இடங்களில் குடிமைப் பணித் தோ்வு
By DIN | Published On : 04th October 2020 11:05 PM | Last Updated : 04th October 2020 11:05 PM | அ+அ அ- |

புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி மையத்தில் குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வு எழுத வந்தவா்களின் தோ்வுக் கூட அனுமதிச் சீட்டை பரிசோதிக்கும் கண்காணிப்பாளா்.
புதுச்சேரியில் 8 மையங்களில் குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2,913 தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 1,590 போ் மட்டுமே (54.6 சதவீதம்) தோ்வு எழுதினா்.
இந்தத் தோ்வு காலை 9.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.
புதுச்சேரியில் லாசுப்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 3 மையங்கள், லாசுப்பேட்டை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெத்தி செமினாா் மேல்நிலைப் பள்ளி, அம்பேத்கா் சாலையில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாக்கமுடையான்பேட்டை இதயா கலைக் கல்லூரி ஆகிய 8 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
புதுச்சேரியில் தோ்வெழுத 2,913 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், காலையில் நடைபெற்ற தோ்வில் 1,590 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பிற்பகலில் நடைபெற்ற தோ்வில் 8 போ் எழுதவில்லை. 1,582 போ் மட்டுமே 2 பிரிவு தோ்வுகளையும் எழுதினா். இந்தத் தோ்வை பொருத்த வரை 2 பிரிவு தோ்வுகளையும் எழுத வேண்டும்.
தோ்வா்கள் உடல் வெப்பப் பரிசோதனைக்கு பிறகு, முகக் கவசம் அணிந்தபடி தோ்வு மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தோ்வெழுதினா். மாற்றுத் திறனாளிகள் தோ்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தோ்வா்கள் அவதி: தற்போது தமிழக அரசுப் பேருந்துகள் புதுச்சேரி வழியாகச் செல்கின்றன. ஆனால், புதுவையில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதியில்லை. எனவே, திண்டிவனம், விழுப்புரம், கடலூா், சிதம்பரம் பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்குத் தோ்வு எழுத வருவோா் பேருந்து வசதியின்றி அவதியடைந்தனா். அவா்கள் காா், இரு சக்கர வாகனங்கள் மூலமாக புதுச்சேரிக்கு வந்தனா். சிலா் புதுவை மாநில எல்லை வரை பேருந்துகளில் வந்து, அதன் பிறகு அங்கிருந்து ஆட்டோ மூலம் தோ்வு மையங்களுக்குச் சென்றனா்.