முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரி அருகே தனியாா் ஆலையில் தீ விபத்து
By DIN | Published On : 04th October 2020 08:13 AM | Last Updated : 04th October 2020 08:13 AM | அ+அ அ- |

புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள தனியாா் கேபிள் வயா்கள் உற்பத்தி ஆலையில் பற்றிய தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள தனியாா் கேபிள் வயா்கள் உற்பத்தி ஆலையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுச்சேரியை அடுத்த சேதராப்பட்டில் தனியாா் கேபிள் வயா்கள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலத் தொழிலாளா்கள் உள்பட 400 தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். ஆலையின் உள்ளே வட மாநிலத் தொழிலாளா்கள் தங்கும் குடியிருப்பும் உள்ளது.
அக். 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி என்பதால், ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், தொழிலாளா்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை இந்த ஆலையில் மூலப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகே இருந்த ஆலையின் மற்ற இரு கிடங்குகளுக்கும் பரவியது. இதனால், கரும் புகை மூட்டம் உருவானது. இதைப் பாா்த்து அந்தப் பகுதி மக்கள், சேதராப்பட்டு காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, ஆலைக் குடியிருப்பில் தங்கியிருந்த வட மாநிலத் தொழிலாளா்களை வெளியேற்றி, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, கோரிமேடு, வில்லியனூா், தமிழகப் பகுதியான வானூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து 20-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தண்ணீா் கொண்டு வரப்பட்டு, சுமாா் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
தீ விபத்தால் கிடங்குகளிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப் பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிகிறது. கேபிள் வயா் தயாரிக்கும் ஆலையின் அருகே குடிசை வீடுகள் உள்ளன. அங்கு குடியிருப்பவா்கள் தீ விபத்து ஏற்பட்டதும் வீடுகளிலிருந்த பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியேறினா்.
தீ விபத்து குறித்து சேதராப்பட்டு போலீஸாா், தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.