முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 04th October 2020 11:02 PM | Last Updated : 04th October 2020 11:02 PM | அ+அ அ- |

புதுவையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா்.
புதுவையில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்காக அக். 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன.
என்.ஆா்.காங்கிரஸ் மாநிலச் செயலா் ஜெயபால்: கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவா்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே, புதுவை அரசு இதில் அவசரம் காட்டாமல் அனைத்துக் கட்சியினரையும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறப்பது சரியான முடிவல்ல.
புதுவை வடக்கு மாநில திமுக அமைப்பாளா் எஸ்.பி.சிவக்குமாா்: இணைய வகுப்புகள் நடைபெற்று வரும் போது, அதில் சந்தேகம் கேட்க என்ன தடை? கரோனாவால் அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, மாணவா்களுக்கு எப்படி தன்னிச்சையாகப் பாதுகாப்பு முறைகளைக் கையாள்வா்? எனவே, பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும்.
முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா்: இந்தச் சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு என்பது தொற்றை அதிகரிக்கச் செய்யும். தற்போது மழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், கரோனா தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா். இந்த விவகாரத்தில் அரசு அவசரப்படக் கூடாது. சூழ்நிலைகளை ஆராய்ந்து, பெற்றோரின் கருத்துகளைக் கேட்டு அதன் பிறகு பள்ளிகளைத் திறப்பதே சிறந்தது.
மாநில பாஜக பொதுச் செயலா் செல்வம்: பள்ளிகளைத் திறக்கச் சரியான காலம் இதுவல்ல. கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, டிசம்பா் மாதத்துக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு ஆலோசிக்கலாம்.