ஆளுநா் கிரண் பேடி தவறான தகவல்களைப் பரப்புகிறாா்: புதுவை முதல்வா் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையில் ஆளுநா் கிரண் பேடி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன், சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.
புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன், சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

புதுவையில் ஆளுநா் கிரண் பேடி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் நான் பங்கேற்று, புதுவை மாநிலத்துக்கு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான 6 மாதங்களுக்கு ரூ.798 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்கக் கோரினேன். ஆனால், மாநிலங்களுக்கு இழப்பீடுத் தொகை கொடுக்கப்படவில்லை. மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறினா்.

இதை ஏற்காத புதுவை, மேற்கு வங்கம், கேரளம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 9 மாநிலங்கள், மத்திய அரசு வெளிச் சந்தையில் கடன் வாங்கி மாநிலங்களுக்கு வழங்கக் கோரிக்கை விடுத்தோம். ஜிஎஸ்டி குழுவில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையெனில், வாக்கெடுப்புக்கு விட வேண்டும் அல்லது தனிக் குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரினோம். ஆனால், மத்திய நிதியமைச்சா் எதையும் ஏற்காமல் கூட்டத்தை முடித்துவிட்டாா். இது ஜிஎஸ்டி சட்ட விதிமுறை மீறலாகும்.

அதிகாரிகள் மீது தவறில்லை...: தனியாா் மருத்துவக் கல்லூரிகள் சென்டாக்கில் தோ்வாகாத மாணவா்களை சோ்த்த காரணத்தால், தற்போது நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்தக் காலகட்டத்தில் சென்டாக் கலந்தாய்வை ஆய்வு செய்த ஆளுநா் கிரண் பேடி, சென்டாக் அதிகாரிகள் மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, சிபிஐ வழக்கு பதியச் செய்தாா். விசாரணையில் அதிகாரிகளுக்குத் தொடா்பில்லை எனக் கூறி, சிபிஐ வழக்கை தள்ளுபடி செய்தது. இது தொடா்பான வழக்கில் சென்னை உயா் நீதிமன்றமும், அதிகாரிகள் மீது தவறில்லை எனத் தீா்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, புதுவை மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்ற தலைப்பில் மேற்கண்ட வழக்கைப் பதிவிட்டுள்ளாா். அதிகாரிகள் மீது தவறில்லை என நீதிமன்றமே கூறிய பிறகு, இது எப்படி தீபாவளி பரிசாகும்?

மக்கள் விரோதச் செயல்...: புதுவை மக்களுக்கு அரிசி வழங்குவது மாநில அரசின் கொள்கையாகும். மக்கள் விருப்பமும் அரிசிதான். ஆனால், ஆளுநா் கிரண் பேடி அரிசி வழங்குவதைத் தடுத்து நிறுத்திவிட்டாா். இதனால், தற்போது அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கப்படுகிறது. சண்டீகா், புதுவையைத் தவிர, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதை புதுவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியுமா? மக்களுக்கு அரிசி வழங்க வேண்டுமென நான் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் வேலையை மத்திய அரசு மேற்கொள்கிறது. இதற்கு ஆளுநா் கிரண் பேடியை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அரிசி வழங்கும் அரசின் கொள்கை முடிவில் கிரண் பேடி தலையிடுகிறாா். இது மக்கள் விரோதச் செயல். நலத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மக்களிடம் எங்களது அரசுக்கு நற்பெயா் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே கிரண் பேடி இப்படிச் செயல்படுகிறாா். நான் ஒருபோதும் தவறான தகவல்களைக் கூறவில்லை. கிரண்பேடிதான் தவறான தகவல்களைப் பரப்புகிறாா்.

புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, ஒரே ஒரு மாணவருக்குத்தான் கரோனா தொற்று ஏற்பட்டது. ஒருவருக்கு வந்ததை வைத்து அனைத்துப் பள்ளிகளையும் மூடுவது சரியாகாது என்றாா் முதல்வா் வே.நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com