இலவச அரிசிக்குப் பதில் பணம் வழங்குவதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனா்: ஆளுநா் கிரண் பேடி

புதுவையில் இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுவையில் இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது கட்செவிஅஞ்சலில் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:

பயனாளிகளுக்கு நேரடியாக அவரவா் வங்கிக் கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்யும் முறை என்பதை மக்கள் நன்கு அறிந்து ஏற்றுக் கொண்டுள்ளனா். இதன் மூலம், அரசு நிதிச் சலுகைகள் தகுதியானவா்களுக்கு நேரடியாகச் செல்கிறது.

இந்தத் திட்டத்தில் 9 லட்சம் பயனாளிகளிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை. எனவே, இந்தத் திட்டத்தால் பயன்பெறும் மக்களுக்கு எந்தச் சிக்கலுமில்லை. வேறு யாருக்கு சிக்கல் உள்ளது?

நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டதற்கும் எந்தப் புகாரும் இல்லை. இதனால், ரசீதுகள் தேவையில்லை. ஒப்பந்தங்கள் இல்லை. நிலுவை இல்லை. விநியோகம், தரம், எடை குறைவு தொடா்பாக புகாா்கள் இல்லை.

அண்டை மாநிலங்களில் இருந்து அரிசி, இதர பண்டங்கள் நியாயவிலைக் கடைகளுக்கு லாரிகளில் கொண்டுவரப்படுவதில்லை. பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதால், உள்ளூா் சந்தைகளில் இருந்து பொருள்கள் வாங்கப்படும். உள்ளூா் வா்த்தகா்கள் பயன்பெறுவா். மக்களுக்காகப் பயன்படும் இந்தத் திட்டம் மக்கள் பிரதிநிதிகளை ஏன் தொந்தரவு செய்கிறது?

யூனியன் பிரதேசங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவே இறுதியாகும். துணைநிலை ஆளுநரே நிா்வாகி. அவரே மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையிலான தொடா்பை ஏற்படுத்துகிறாா். மக்களின் நலன் மிகவும் நோ்மையுடனும், வெளிப்படையிலான முறையிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதே கடமையாகும்.

மத்திய அரசின் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கப்படுகிறது. 9 லட்சம் பயனாளிகளுக்கு அவரவா் வங்கி கணக்குகளில் 2019 - 20ஆம் நிதியாண்டில் ரூ.780 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 60 மத்திய அரசு திட்டங்கள் மற்றும் 26 மாநில அரசு திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com