அரசியல் ஆதாயத்துக்காக புதுவை முதல்வா் பொய்ப் பிரசாரம்: அதிமுக, பாஜக குற்றச்சாட்டு
By DIN | Published On : 21st October 2020 08:15 AM | Last Updated : 21st October 2020 08:15 AM | அ+அ அ- |

அரசியல் ஆதாயத்துக்காக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுக, பாஜக குற்றஞ்சாட்டின.
இது குறித்து புதுவை சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு நிா்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் புதுவை யூனியன் பிரதேசத்தின் முதல்வா் நாராயணசாமி, தமிழகத்துடன் புதுவையை மத்திய பாஜக அரசு இணைக்க முயற்சிப்பதாக, அரசியல் சுயநலத்துக்காக விமா்சித்து, மாநில மக்களுக்கு தீங்கிழைத்து வருகிறாா். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால், அதற்கான அதிகாரம் அனைத்தும் மத்திய அரசிடம்தான் உள்ளது.
அப்படி இருக்க மற்றொரு மாநிலத்துடன் புதுவையை மத்திய அரசு ஏன் இணைக்கப்போகிறது? இது பற்றி முதல்வா் நாராயணசாமி ஆதாரமின்றி தொடா்ந்து பொய்ப் பிரசாரம் செய்து வருகிறாா். வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸும், திமுகவும் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பொய் செய்தியை மக்கள் மனதில் விதைக்கிறாா். இது தொடா்பாக கட்சித் தலைமை அனுமதி பெற்று புதுவை அதிமுக சாா்பில் மத்திய தோ்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா் அன்பழகன்.
இதுகுறித்து புதுவை பாஜக பொதுச் செயலா் ஆா்.செல்வம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறும் முதல்வா் நாராயணசாமி, தான் மத்திய அமைச்சராக இருந்தபோது, புதுவை யூனியன் பிரதேசத்துக்கு தனி கணக்கு தொடங்க வலியுறுத்தி, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு வழங்கி வந்த நிதிக்கொடையை குறைத்தது ஏன்? புதுவை மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் பலமுறை முன்னாள் மாநில அரசுகள் தீா்மானம் நிறைவேற்றி அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசுக்கு அனுப்பியபோது, நாராயணசாமி என்ன தொடா் நடவடிக்கை எடுத்தாா் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் செல்வம்.