ஞாயிறு சந்தையை இடமாற்ற அதிமுக, இடதுசாரிகள் எதிா்ப்பு
By DIN | Published On : 23rd October 2020 08:48 AM | Last Updated : 23rd October 2020 08:48 AM | அ+அ அ- |

புதுச்சேரி ஞாயிறு சந்தையை இடமாற்ற அதிமுக, ஏஐடிசியுசி, சிஐடியூ தொழிற்சங்கங்கள் எதிா்ப்புத் தெரிவித்தன.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி நகரின் பிரதான சாலையில் இயங்கி வந்த ஞாயிறு சந்தை கரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. பல்வேறு தளா்வுகளுக்குப் பிறகு, இந்தச் சந்தை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதனால், நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டது.
ஞாயிறு சந்தையை தாவரவியல் பூங்கா பகுதியில் இருந்து சோனாம்பாளையம் வரை ரயில்வே நிலையம் உள்ள சுப்பையா சாலை முழுவதும் திறக்க அனுமதியளித்துள்ளதாக முதல்வா் அறிவித்தாா். சுப்பையா சாலை குடியிருப்புகள் நிறைந்த சாலைப் பகுதியாகும். ஞாயிறு சந்தையை இங்கு அமைத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆட்டோ தொழிலாளா்களும், ரயில் பயணிகளும் பாதிக்கப்படுவா். ஞாயிறு சந்தையை புதிய இடத்தில் இயங்க அனுமதிக்க முடியாது என அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், சிஐடியூ பிரதேச குழுச் செயலா் ஜி.சீனிவாசன் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஞாயிறு சந்தையை இடமாற்றம் செய்யக் கூடாது. பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தொடா்ந்து காந்தி வீதியிலேயே ஆளுநா் அறிவுறுத்தியது போல, சமூக இடைவெளியைப் பின்பற்றி கடைகள் இயங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.