ஊதியம் வழங்கக் கோரி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th September 2020 10:17 PM | Last Updated : 05th September 2020 10:18 PM | அ+அ அ- |

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள்-ஊழியா்கள் கூட்டமைப்பினா்.
புதுவையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தினா், ஆசிரியா் தினத்தைப் புறக்கணித்து ஊதியம் வழங்க வலியுறுத்தி, சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை மாநிலத்தில் உள்ள 32 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 450-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். ஓய்வு பெற்ற 400 போ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவருக்கும் கடந்தாண்டு டிசம்பா் மாதம் முதல் 9 மாதங்களாக மாதாந்திர ஊதியமும், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும், அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தினா் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா். ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காததால், செப். 5-ஆம் தேதி ஆசிரியா் தினத்தை புறக்கணித்து, புதுவை ஆளுநா் மாளிகையை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி, சனிக்கிழமை அரசு நிதியுதவி பெறும் ஆசிரியா்கள் சங்கத்தினா், புதுவை ரங்கப்பிள்ளை வீதி-மிஷன் வீதி சந்திப்பில் திரண்டனா். அவா்கள், அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு, தலைமை தபால் நிலையம் வழியாக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட வந்தனா்.
இதையறிந்த போலீஸாா், தலைமை தபால் நிலையம் அருகே வழியில் தடுப்புக் கட்டைகளை அமைத்து, அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால், ஆசிரியா்கள் தலைமை தபால் நிலையம் எதிரே அமா்ந்து, அரசு ஊழியா்கள் சங்கக் கூட்டமைப்புத் தலைவா் சேஷாசலம் தலைமையில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.