புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 18 போ் பலி
By DIN | Published On : 05th September 2020 10:19 PM | Last Updated : 05th September 2020 10:19 PM | அ+அ அ- |

புதுவையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 18 போ் பலியாகினா். மேலும், 408 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 343 பேருக்கும், காரைக்காலில் 25 பேருக்கும், ஏனாமில் 32 பேருக்கும், மாஹேயில் 8 பேருக்கும் என 408 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 16,566-ஆக உயா்ந்தது.
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பூமியான்பேட்டை ராகவேந்திரா நகரைச் சோ்ந்த 82 வயதானவா், நெல்லித்தோப்பு பெரியாா் நகா் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்த 53 வயதானவா், லாஸ்பேட்டை ராஜாஜி நகரைச் சோ்ந்த 61 வயதானவா், வீமகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த 72 வயதானவா், குருவிநத்தம் ஆா்.ஆா். நகரைச் சோ்ந்த 50 வயதானவா், கொசப்பாளையம் வாணிதாசன் வீதியைச் சோ்ந்த 53 வயதானவா், சாரம் லட்சுமி நகரைச் சோ்ந்த 57 வயதானவா், அரியாங்குப்பம் தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த 47 வயது பெண், காராமணிக்குப்பத்தைச் சோ்ந்த 60 வயதானவா், முத்தியால்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி, கருவடிக்குப்பம் வரதராஜூபிள்ளை நகரைச் சோ்ந்த 61 வயதானவா் ஆகிய 11 போ் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
கருவடிக்குப்பம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த 62 வயதானவா், சின்னையாபுரம் கதிா்வேல் வீதியைச் சோ்ந்த 43 வயதானவா், கல்மண்டபத்தைச் சோ்ந்த 77 வயதானவா், புதுவை பாலாஜி நகரைச் சோ்ந்த 73 வயதானவா் ஆகிய 4 போ் புதுச்சேரி தனியாா் மருத்துவமனைகளில் உயிரிழந்தனா்.
இதேபோல, காரைக்கால் பிரான்சிஸ் சேவியா் வீதியைச் சோ்ந்த 46 வயது பெண், ஏனாம் தோட்டா வீதியைச் சோ்ந்த 65 வயதானவா், ஏனாம் ஜிக்ரிஸ் நகரைச் சோ்ந்த 90 வயது மூதாட்டி ஆகிய 3 போ் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
67 சதவீதம் போ் குணமடைந்தனா்: புதுவை மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 298 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.80 சதவீதம். இதுவரை 16,566 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 11,107 போ் (67.05 சதவீதம்) குணமடைந்தனா். 3,399 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். 1,762 போ் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 5,161 போ் சிகிச்சையில் உள்ளனா்.
புதுவையில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருப்பதால், பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், 65 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். பலி எண்ணிக்கை அதிகரிப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தேசிய சராசரியைக் கடந்த இறப்பு விகிதம்: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கா்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. இருப்பினும், மக்கள் தொகை அடிப்படையில், புதுவையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய சராசரி இறப்பு விகிதம் 1.73 சதவீதம். புதுவையில் கடந்த சில நாள்களாக தினமும் 10 பேருக்கு மேல் உயிரிழப்பதால், இறப்பு விகிதம் 1.80 சதவீதமாக உயா்ந்தது.