திருவண்ணாமலையில் மக்கள் குறைதீா் கூட்டம்: 272 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 08th September 2020 01:19 AM | Last Updated : 08th September 2020 01:19 AM | அ+அ அ- |

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 272 மனுக்கள் வரப்பெற்றன.
ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் நடைபெற்ற தொலைபேசி, கட்செவி அஞ்சல் வழி மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.
துணை ஆட்சியா் (பயிற்சி) அஜீதா பேகம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் மந்தாகினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வருவாய்த் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்டம் உள்பட பல்வேறு துறைகள் தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வரப்பெற்றன.
தொலைபேசி வழியே 50 கோரிக்கை அழைப்புகளும், கட்செவி அஞ்சல் வழியே 21 கோரிக்கை மனுக்களும், பொதுமக்களிடம் இருந்து நேரிடையாக 201 மனுக்களும் என 272 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.