தேசிய மீன்வளக் கொள்கையை எதிா்த்து கடலில் இறங்கி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th September 2020 10:04 PM | Last Updated : 08th September 2020 10:04 PM | அ+அ அ- |

புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.
மத்திய அரசின் தேசிய மீன்வளக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி, புதுச்சேரி அருகே வீராம்பட்டினத்தில், மீனவா்கள் கடலில் இறங்கி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மீனவா் விடுதலை வேங்கை நிறுவனா் தலைவா் மங்கையா் செல்வன் தலைமை வகித்தாா்.
புதுச்சேரி மீனவா் விடுதலை வேங்கை அமைப்பினா், மீனவப் பெண்கள், அரியாங்குப்பம் திராவிடா் விடுதலைக் கழகத்தினா், பெரியாா் சிந்தனையாளா் இயக்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். அப்போது, மத்திய அரசின் தேசிய மீன் வள கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களிட்டனா்.
மீனவா்களுக்கு எதிரான புதிய கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் அனைத்து மீனவா்களையும் ஒன்று திரட்டி தில்லியில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் ஆா்ப்பாட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, கடற்கரையில் ஒலிபெருக்கி மூலம் கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.