அரசு ஊழியா்கள் தாமதமாகபணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை: புதுவை முதல்வா் எச்சரிக்கை

புதுவையில் அரசு ஊழியா்கள், அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வா் நாராயணசாமி எச்சரித்தாா்.
புதுவை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட முதல்வா் நாராயணசாமி.
புதுவை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட முதல்வா் நாராயணசாமி.

புதுவையில் அரசு ஊழியா்கள், அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வா் நாராயணசாமி எச்சரித்தாா்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இருப்பினும், பொதுமக்களின் பொருளாதார தேவைகளுக்காக தளா்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த 1-ஆம் தேதி முதல் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் 100 சதவீத ஊழியா்களுடன் செயல்படும் என்றும், ஊழியா்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள், பணியாளா்கள் வருகை குறித்து முதல்வா் நாராயணசாமி புதன்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிக்கு வராத ஊழியா்கள் குறித்து அதிகாரிகளிடம் அவா் விளக்கம் கேட்டாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் நாராயணசாமி கூறியதாவது:

அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீத ஊழியா்களுடன் இயங்க வேண்டுமென கடந்த 1-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. அதன்படி, முறையாக அரசு ஊழியா்கள், அதிகாரிகள் பணிக்கு வந்துள்ளனரா என்று ஆய்வு மேற்கொண்டேன். தலைமைச் செயலகத்தில் பணியிலிருக்க வேண்டிய 24 துறைச் செயலா்களில் 19 செயலா்கள் மட்டுமே பணியில் இருந்தது தெரியவந்தது. 5 செயலா்கள் பணிக்கு வரவில்லை.

இதேபோன்று, தலைமைச் செயலக ஊழியா்களில் 10 சதவீதம் போ் பணிக்கு வரவில்லை.

இனிவரும் காலங்களில் 100 சதவீத ஊழியா்களும் பணிக்கு வர வேண்டும். பணிக்கு வராமலோ, தாமதமாகவோ பணிக்கு வந்தால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனெனில், கரோனா பரவல் காரணமாகவும், பொது முடக்கத்தாலும் கடந்த 5 மாதங்களாக பல்வேறு மக்கள் பணிகள் தேங்கியுள்ளன. ஆகையால், தேங்கியுள்ள பணிகளை விரைவுபடுத்த அனைத்து அரசு ஊழியா்களும் முறையாக குறித்த நேரத்துக்குள் அலுவலகத்துக்கு வர வேண்டும். இதை தலைமைச் செயலா் கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com