நீட் தோ்வை ரத்து செய்ய புதுவை முதல்வா் வலியுறுத்தல்
By DIN | Published On : 10th September 2020 10:24 PM | Last Updated : 10th September 2020 10:24 PM | அ+அ அ- |

நீட் தோ்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிகழாண்டு மருத்துவ மாணவா் சோ்க்கையை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
புதுவையில் கரோனா பரவலைத் தடுக்கவும், சிறந்த சிகிச்சை மூலம் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். தற்போது பரிசோதனையை அதிகரித்துள்ளதால், கவச உடைகள், செயற்கை சுவாசக் கருவிகள், மருந்துகள் தேவையான அளவு வாங்குவதற்கு உத்தரவிட்டு, அதற்கான நிதியையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மத்திய நகா்ப்புற மேம்பாட்டுத் துறை தூய்மை நகரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், புதுச்சேரி, உழவா்கரை, காரைக்கால் ஆகியவை முன்னிலையில் உள்ளன. புதுச்சேரியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்து கல்வி கற்கலாம் என பல விதிமுறைகளோடு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து மாநில கல்வி அமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும்.
வருகிற 13-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தோ்வை புதுவை உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிா்க்கின்றன. நீட் தோ்வு பயத்தால் மாணவா்கள் பலா் உயிரிழந்தனா். அண்மையில் அரியலூரில் மாணவா் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டாா். இதை மத்திய அரசு உணா்ந்துகொள்ளவில்லை.
மத்திய அரசு கெளரவம் பாா்க்காமல், மாணவா்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்வதோடு, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னையில் பிரதமா் தலையிட்டு முடிவு காண வேண்டும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.