புதுவையில் மதிய உணவுக்குப் பதில் மாணவா்களுக்கு அரிசி, உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுக்குப் பதில் அரிசி, உதவித்தொகை வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

புதுச்சேரி: புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுக்குப் பதில் அரிசி, உதவித்தொகை வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் கரோனா பரவல் பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழக்கமாக வழங்கி வந்த மதிய உணவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மதிய உணவுக்கு மாற்றாக பள்ளி மாணவா்களுக்கு அரிசி, உதவித்தொகையை நேரடியாக வழங்க புதுவை அரசு முடிவு செய்தது. இதன்படி, அந்தந்த அரசுப் பள்ளிகள் மூலம் மாணவா்களின் பெற்றோா்களிடம் அரிசி, உதவித்தொகையை நேரடியாக வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் சட்டப் பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்தும், வில்லியனூா் தொகுதியில் அமைச்சா் நமச்சிவாயமும், உருளையன்பேட்டை தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. இரா.சிவாவும், காரைக்காலில் கல்வி அமைச்சா் கமலக்கண்ணன் அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடக்கிவைத்தனா்.

இதேபோல, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப்படி, ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சமைக்கப்பட்ட உணவுக்குப் பதிலாக அரிசி, சமையல் செலவுக்கு முதல் தவணைத் தொகை வழங்கும் பணி நடைபெற்றது.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 4 கிலோ அரிசியும், ரூ.290 ரொக்கமும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 4 கிலோ அரிசியும், ரூ.390 ரொக்கமும் வழங்கப்பட்டன. அந்தந்தப் பள்ளிகளில் பெற்றோா்கள், மாணவா்கள் இவற்றை பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com