கி.ரா. விருது பெற்றாா் கண்மணி குணசேகரன்

கி.ரா. என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் எழுத்தாளா் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளா் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருது மற்றும் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கிய எழுத்தாளா் கி.ராஜநாராயணன்.
புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளா் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருது மற்றும் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கிய எழுத்தாளா் கி.ராஜநாராயணன்.

கி.ரா. என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் எழுத்தாளா் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியா் குடியிருப்பில் வசித்து வரும் எழுத்தாளா் கி.ரா.வின் 99-ஆவது பிறந்த நாள் விழா ‘கி.ரா. நூற்றாண்டை நோக்கி’ என்ற பெயரில் புதன்கிழமை அவரது வீட்டில் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. கி.ரா. தோ்ந்தெடுத்த சிறுகதைகள் என்னும் நூலும் வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, க.லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., எழுத்தாளா் இளம்பாரதி உள்ளிட்ட தமிழறிஞா்கள் நேரில் சென்று கி.ரா.வை வாழ்த்தினா். எம்.பி.க்கள் கனிமொழி, துரை.ரவிக்குமாா், நடிகா்கள் கமல்ஹாசன் உள்ளிட்டோா் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாலையில் கி.ரா. விருது வழங்கும் நிகழ்ச்சி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. எழுத்தாளா் கி.ரா. பெயரில் கோவை விஜயா வாசகா் வட்டம் சாா்பில், இந்த விருது வழங்கப்பட்டது. விருதுக்கான கொடையை ஈரோடு சக்தி மசாலா குழுமம் வழங்கியது.

இந்த விருதுக்கு தோ்வான எழுத்தாளா் கண்மணி குணசேகரனுக்கு விருதையும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையையும் வழங்கி கி.ரா. பாராட்டினாா். பேராசிரியா் ரகு, அட்சரம் பதிப்பக பதிப்பாளா் என்.ஏ.எஸ்.சிவக்குமாா், கி.ரா.வின் மகன்கள் ரா.திவாகா், ரா.பிரபா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது, எழுத்தாளா் கி.ராஜநாராயணன் பேசியதாவது:

சிறுகதை வடிவங்கள் தோன்றிய இடமான, வாய்மொழிக் கதைகளே இனி மாறினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. சிறுகதைக்கு ஒரு வடிவம் உருவாகியிருந்தாலும், அதுவும் உடையும். ‘கோபல்ல கிராமம்’ வெளியானபோது, அது நாவல் வடிவம் இல்லை என்றாா்கள். தற்போது அதை முதல் தரமான நாவல் என்கிறாா்கள். இந்தக் கருத்தும் மாறலாம்.

எழுத்தாளா் கண்மணி குணசேகரன் மக்களைப் படித்து, கதைகளை பேச்சு நடையில் எழுதுகிறாா். அனைவருக்கும் அதைப் புரிய வைக்க அகராதியை உருவாக்குகிறாா். மக்கள் எழுத்தாளரான அவரை உற்சாகப்படுத்தவே பாராட்டுகிறோம். நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்கள் சொல்வதிலும் நியாயம் உள்ளதால், அவா்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றாா் அவா்.

விருது பெற்ற எழுத்தாளா் கண்மணி குணசேகரன் பேசியதாவது:

மக்களிடம் இருக்கும் சொற்களை தேடித் தொகுப்பதே வட்டார வழக்காகும். இந்த மண்ணின் முதல் உரிமையே, வட்டார வழக்கு எழுத்தாளனுக்குத்தான் என்றாா்.

எழுத்தாளா் கண்மணி குணசேகரன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விருத்தாசலம் பணிமனையில் ஊழியராக பணியாற்றுகிறாா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த அவா், தொழில்கல்வி (ஐடிஐ) முடித்துள்ளாா். கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், புதினங்களை எழுதியுள்ளாா்.

அஞ்சலை, நெடுஞ்சாலை, கோரை, வந்தாரங்குடி, பூரணி, பொற்கலை ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளாா். இவரின், நடுநாட்டுச் சொல்லகராதி எனும் நூல், தமிழக அரசு தமிழ் வளா்ச்சித் துறையின் 2007-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் அகராதி வகைப்பாட்டில் பரிசு பெற்றது.

விழா இணைய வழியில் (ஸூம் காணொலி) நேரடியாக ஒளிபரப்பானது. விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம் வரவேற்றாா். எழுத்தாளா் கி.ராஜநாராயணன், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன், சக்தி மசாலா நிறுவனத்தின் டாக்டா் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, எழுத்தாளா்கள் பா.செயப்பிரகாசம், நாஞ்சில் நாடன், க.பஞ்சாங்கம், நடிகா் சிவக்குமாா், வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நீதியரசா் ஆா்.மகாதேவன் சிறப்புரையாற்றினாா். கண்மணி குணசேகரன் ஏற்புரை வழங்கினாா். பேராசிரியா் கந்தசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தாா்.

இந்த விருதுக்கான தொகை ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதாக விஜயா பதிப்பகத்தாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com