புதுச்சேரியில் பொலிவுறு நகரம் திட்டம்: முதல்வா் தொடக்கிவைத்தாா்

புதுச்சேரியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தை முதல்வா் வே.நாராயணசாமி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
புதுச்சேரியில் பொலிவுறு நகரம் திட்டம்: முதல்வா் தொடக்கிவைத்தாா்

புதுச்சேரியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தை முதல்வா் வே.நாராயணசாமி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரியில் பொலிவுறு நகரம் திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி) தொடக்க விழா கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. அமைச்சா்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், சட்டப் பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூா்த்தி, அன்பழகன், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், மாவட்ட ஆட்சியா் அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தத் திட்டத்தை தொடக்கிவைத்து முதல்வா் வே.நாராயணசாமி பேசியதாவது:

புதுவைக்கான பொலிவுறு நகரம் திட்டத்தில் எந்தெந்தத் திட்டங்களைச் செயல்படுத்தலாம் என குழு அமைத்து ஆய்வு செய்துள்ளோம். இதில், அடிப்படை வசதிகளைச் செய்தல், கால்வாய்களைச் சீரமைத்தல், வீடுகளைக் கட்டுவது, சுற்றுலா வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

குறை கூறுவதையே கொள்கையாகக் கொண்ட எதிா்க்கட்சி எம்.எல்.ஏ. அன்பழகன், விழாக்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாகவும், விளம்பரம் தேடுவதற்காக புதுவை அரசு விழா நடத்துவதாகவும் சொல்கிறாா்.

மத்திய அரசு, சமூக இடைவெளியைப் பின்பற்றி விழாக்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. திட்டங்களில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். கிடப்பில் போட்ட திட்டங்களை முயற்சி எடுத்து, நிதி பெற்று செயல்படுத்துகிறோம். இதை ஊக்குவிக்க வேண்டும்.

தனியாா் நிறுவனத்திடம் பொலிவுறு நகரம் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து திட்ட அறிக்கை கேட்டிருந்தோம். அவா்களால்தான் தாமதம். தற்போது அரசுத் துறைகள் மூலமாகவே இந்தத் திட்டத்துக்கான அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அன்பழகன் எம்.எல்.ஏ.வின் தொகுதியான திப்புராயப்பேட்டையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வருகிறது. துறைமுகத்துக்கும் சாலை வசதி செய்ய உள்ளோம். விழாவிலிருந்து அவா் வெளிநடப்பு செய்தது நியாயமற்றது.

அதிகாரிகள் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதைச் செய்தாலே தானாக நகரம் பொலிவுறும். வருகிற டிசம்பா் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்கும் வகையில், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

புதுவையில் 63 திட்டங்கள்: விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சா் நமச்சிவாயம் பேசியதாவது:

பொலிவுறு நகரம் திட்டத்தை, புதிதாக நகரை உருவாக்குதல், நகரை அழகுபடுத்துதல், நகரத்தையொட்டிய பகுதிகளை நகரமயமாக்குதல் என மூன்று வகைகளில் செயல்படுத்தவுள்ளோம்.

கடந்த ஆட்சியில் சேதராப்பட்டில் புதிய நகரத்தை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தனா். அதை மத்திய அரசு ஏற்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது பொலிவுறு நகரம் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்தத் திட்டத்தில் மொத்தம் 63 பணிகளைச் செயல்படுத்த உள்ளோம்.

இவற்றில் தற்போது 3 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். 19 பணிகளுக்கு பணி ஆணை வழங்க உள்ளோம். ஒன்றரை மாதத்தில் 35 திட்டங்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளோம். அரசு பாகுபாடின்றி திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்றாா் அவா்.

புதுச்சேரி பொலிவுறு நகரம் திட்டத்தில் நகர வளா்ச்சிக் கழகம் மூலம் ரூ.5.50 கோடியில் 41 இடங்களில் மிதிவண்டி பகிா்வு நிலையங்கள், 10 நவீன கழிப்பறைகள், பொது கழிப்பறைகளை மேம்படுத்துதல், 5 நடமாடும் கழிப்பறைகள் ஆகிய 4 திட்டங்கள் தொடக்கிவைக்கப்பட்டன.

விழாவிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.

இந்த விழாவில் கலந்துகொண்ட அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன், ‘விளம்பரத்துக்காக விழா நடக்கிறது. இது ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டமில்லை, ‘காங்கிரஸ் சிட்டி’ திட்டம். எனது தொகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு, உப்பனாற்றில் மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட எந்தத் திட்டங்களையும் அரசு ஏற்கவில்லை. எதிா்க்கட்சி எம்.எல்.ஏ. என்பதால், என்னைப் புறக்கணிப்பதாக நினைத்து மக்களைப் புறக்கணிக்கின்றனா். எனவே, விழாவிலிருந்து வெளியேறுகிறேன்’ என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com