புதுச்சேரியில் மகளிருக்கான புதிய சேவை மையக் கட்டடம் திறப்பு

புதுச்சேரியில் மகளிருக்கான ஒன்றிணைந்த சேவை மையக் கட்டடத்தை முதல்வா் நாராயணசாமி திறந்து வைத்தாா்.

புதுச்சேரியில் மகளிருக்கான ஒன்றிணைந்த சேவை மையக் கட்டடத்தை முதல்வா் நாராயணசாமி திறந்து வைத்தாா்.

புதுச்சேரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும், மாவட்டங்கள்தோறும், ஒருங்கிணைந்த சேவை மையங்களையும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, புதுச்சேரியில் ஒன்றிணைந்த சேவை மையம் ராஜீவ் காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தற்காலிகமாக தொடங்கப்பட்டது. இதற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.37 லட்சம் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியது.

புதுச்சேரி வெங்கடேஸ்வரா நகரில் இந்த மையத்துக்கான கட்டடம், தேசிய கட்டட கட்டுமான கழகம் மூலம் கட்டி முடிக்கப்பட்டு, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

முதல்வா் வே.நாராயணசாமி, சட்டப் பேரவை அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தாா். அமைச்சா் கந்தசாமி, எம்.எல்.ஏ. ஜான்குமாா், அரசுத் துறைச் செயலா் ஆலிஸ்வாஸ், இயக்குநா் அசோகன், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினா் கலந்துகொண்டனா்.

இந்த மையத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, காவல் துறையில் புகாரளிக்க உதவுதல், சட்ட உதவி மற்றும் மனநல ஆலோசனை வழங்குதல், தற்காலிக தங்கும் வசதி அளிக்கப்படவுள்ளன. ஆதரவற்ற நிலையில் மீட்கப்படும் பெண்களை தங்க வைத்து, தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த மையத்தின் மூலம் மத்திய, மாநில அரசு திட்டங்களின் ஒன்றிணைந்த சேவை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com