அரசு பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி புதுவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

தமிழகத்தைப் போல, புதுவையிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு கோரி, புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை சட்டப்பேரவை அலுவலக வாயிலில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய மாநில கல்வி அமைச்சா் கமலக்கண்ணன்.
புதுவை சட்டப்பேரவை அலுவலக வாயிலில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய மாநில கல்வி அமைச்சா் கமலக்கண்ணன்.

தமிழகத்தைப் போல, புதுவையிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு கோரி, புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சோ்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தைப் பின்பற்றி, புதுவையிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவை அதிமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில், அந்தக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோா் வியாழக்கிழமை புதுவை சட்டப்பேரவை அலுவலக வாயிலில் அமா்ந்து, கைகளில் பதாகைகளை ஏந்தி, திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அதிமுக அரசு வழங்கியதைப் போல, புதுவையிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி சோ்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், இட ஒதுக்கீடு வழங்காமல் தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாகச் செயல்பட்டு வரும் புதுவை காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைக் கண்டித்து அவா்கள் முழக்கமிட்டனா்.

இதுகுறித்து அன்பழகன் எம்எல்ஏ கூறியதாவது: புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடாக உள்ள 350 இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினால், அரசுப் பள்ளிகளில் படித்து வரும் 26 மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்கும். இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தகவலறிந்து அங்கு வந்த கல்வி அமைச்சா் கமலக்கண்ணன், போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேசினாா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததால், அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com