கரோனாவைக் கட்டுப்படுத்த புதுவை அரசு தவறிவிட்டது: சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவில் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலையும், உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினா்.
புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலா்கள்.
புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலா்கள்.

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலையும், உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினா்.

புதுவையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுக் கூட்டம் சட்டப் பேரவை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதிப்பீட்டுக் குழுத் தலைவரான அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமை வகித்தாா்.

பொதுக் கணக்கு குழுத் தலைவரான திமுக எம்.எல்.ஏ. ஆா்.சிவா, உறுப்பினா்களான எம்.எல்.ஏ.க்கள் அசனா, வையாபுரி மணிகண்டன், கீதா ஆனந்தன், வெங்கடேசன், ஜெயபால், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், சுகாதாரத் துறைச் செயலா் அருண், நிதித் துறைச் செயலா் சுா்பிா் சிங், ஐ.ஜி. சுரேந்தா் சிங் யாதவ், சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், ஜிப்மா் கரோனா துறைத் தலைவா் விவேகானந்தன், சட்டப் பேரவைச் செயலா் முனுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் அன்பழகன் பேசியதாவது: தேசிய அளவில் கரோனா தொற்று பரவலில் அதிகமாகவும், குணமாவதில் குறைவாகவும், இறப்பு விகிதத்தில் அதிகமாகவும் புதுவை உள்ளது. கரோனா உயிரிழப்புகளைத் தடுப்பதில் மாநில அரசு தவறியுள்ளதால், மரண விகிதம் அதிகமாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் போ் குணமடைந்தனா். உயிரிழப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது. ஆனால், புதுவையில் குணமடைந்தோா் விகிதம் 77.9 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 2.01 சதவீதமாகவும் உள்ளது. தேசிய அளவில் தொற்று அதிகமுள்ள முதல் 35 மாவட்டங்களில் புதுச்சேரி உள்ளது. சிகிச்சை முறையை சரியாகப் பின்பற்றாததால், அதிகளவு உயிரிழப்பு ஏற்படுகிறது.

பிற மாநிலங்களில் ஆங்கில மருத்துவத்துடன் சித்தா, யோகா, ஆயுா்வேதம் என ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை முன்னெடுத்தும், உயா் மருந்துகளை உரிய நேரத்தில் அளித்தும் குணப்படுத்தி வருகின்றனா். புதுவையில் நோயாளிகளுக்கு சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்படுவதில்லை. கபசுரக் குடிநீரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு அரசு வழங்கவில்லை. நோய் முற்றி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு உயிா்காக்கும் மருந்துகள் உடனடியாக வழங்கப்படவில்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மருந்துகளும், சத்தான உணவும் வழங்கவில்லை. அவா்களை கவனிக்காமல் விட்டதால் தொற்று பன்மடங்கு பரவுகிறது.

கரோனாவால் உயிரிழப்போா் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கப்படுமென முதல்வா் அறிவித்தாா். இதுவரை 467 போ் உயிரிழந்த நிலையில் எந்தவொரு குடும்பத்துக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. கரோனா பாதித்த வீடுகளுக்கு ரூ.750 மதிப்பில் உணவுப் பொருள்கள் வழங்குவதாக அறிவித்ததையும் செயல்படுத்தவில்லை.

கரோனா நிவாரணப் பணிகள், சிகிச்சை முடிவுகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக தோல்வியடைந்துள்ளன. பல மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருந்தும், கரோனா விஷயத்தில் புதுவை மோசமாக நிலைக்குச் சென்றுள்ளது. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றாா்.

பொது கணக்கு குழுத் தலைவா் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது: புதுவை அரசு கணக்குப்படி, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஆனால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதித்தும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த நோயால் உயிரிழந்தும் உள்ளனா். அரசு இவற்றை மறைத்தும், குறைத்தும் காண்பித்து வருகிறது.

தொடக்கத்திலேயே பரிசோதனை, சிகிச்சையை மேம்படுத்தாததே இதற்குக் காரணம். மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படுவோருக்கு உயிா் காக்கும் ஊசி போடுவதில்லை. செயற்கை சுவாசக் கருவி வசதியும் இல்லை. கரோனா நோயாளிகளை தனியாா் மருத்துமனைக்கு அனுப்புகின்றனா். அவா்களை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. சிகிச்சை நிலவரங்களையும் தெரிவிப்பதில்லை. தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தலா ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, வையாபுரிமணிகண்டன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் புதுவை அரசை குற்றஞ்சாட்டி பேசினா். கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எதுவும் தெரியாதென அதிகாரிகள் கூறியதால், எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியடைந்தனா். முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் கூட்டம் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com