புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிழக கோயில் சிலைகள் பறிமுதல்

தமிழக கோயில்களிலிருந்து கடத்தப்பட்டு புதுச்சேரியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைமைவாய்ந்த 60 ஐம்பொன் சிலைகள்
புதுச்சேரி ரோமன் ரொலன் வீதியில் உள்ள வீட்டில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 60 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 74 சுவாமி சிலைகள்.
புதுச்சேரி ரோமன் ரொலன் வீதியில் உள்ள வீட்டில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 60 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 74 சுவாமி சிலைகள்.

தமிழக கோயில்களிலிருந்து கடத்தப்பட்டு புதுச்சேரியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைமைவாய்ந்த 60 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 74 சுவாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோயில்களிலிருந்து கடத்தப்பட்டு, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட சுவாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டு வருகின்றனா். சிலைக் கடத்தலில் ஈடுபட்ட தீனதயாளன் உள்ளிட்டோா் அளித்த தகவல்களின்பேரில் இந்த நடவடிக்கை தொடா்ந்து வருகிறது.

இந்த வகையில், புதுச்சேரி கோலாஸ் நகரில் மேரிதெரசா என்பவரது வீட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு பழைமையான 11 தமிழக கோயில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், தற்போது புதுச்சேரி காவல் தலைமையகத்தின் பின்பகுதியில், ரோமன் ரொலன் வீதியில் உள்ள அவரது சகோதரா் ஜான்பால் ராஜரத்தினம் வீட்டில் தமிழக கோயில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையிலான 20 போ் கொண்ட குழுவினா், புதுச்சேரி ரோமன் ரொலன் வீதியில் உள்ள ஜான்பால் ராஜரத்தினம் வீட்டில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இவா்களுடன் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் உடன் சென்றனா்.

அந்த வீட்டில் பழைமைவாய்ந்த 60 ஐம்பொன் சுவாமி சிலைகளும், 14 கற்சிலைகளும் என மொத்தம் 74 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தச் சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறியதாவது:

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தமிழக கோயில்களிலிருந்து கடத்தி வரப்பட்டவை. தொன்மையான இந்தச் சிலைகள் எந்தெந்தக் கோயில்களிலிருந்து, எப்போது திருடப்பட்டவை என்பது குறித்து விசாரித்து, சிறப்பு நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட கோயில்களில் அவற்றை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில், போலீஸாா் கும்பகோணத்துக்கு எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com