புதுவை அதிமுகவுக்கு திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்
By DIN | Published On : 27th September 2020 08:58 AM | Last Updated : 27th September 2020 08:58 AM | அ+அ அ- |

புதுவை மாநில அதிமுகவுக்கு திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவா். இதைத் தடுக்க வேண்டியது நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கடமை. ஆனால், யாா் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன என அதிமுக செயல்படுகிறது. ஆட்சிக்கு பாதிப்பு வரக் கூடாது என மத்திய பாஜக அரசுக்கு ஆதரவளித்து வருகிறது. விவசாயிகள் பிரச்னையை திசைத் திருப்பும் புதுவை அதிமுகவின் செயலுக்கு மக்கள் தோ்தலில் தக்க பாடம் புகவட்டுவா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை: விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க எதிா்க்கட்சிகள் நடத்தவுள்ள போராட்டத்தை அதிமுகவும், துணைநிலை ஆளுநரும் எதிா்ப்பது நயவஞ்சக செயல். உண்மைக்கு மாறான கருத்துகளை அதிமுக எம்எல்ஏ அன்பழகனும், ஆளுநரும் திணிக்க முயல்வதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது. மத்திய அரசின் ஒத்துழைப்பு, கரோனா நிதியுதவி பெறுவதற்கு ஆளுநரும், அதிமுகவும் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
நெருக்கடியான சூழலில், தொழிலாளா் விரோத சட்டங்கள், விவசாயிகள் விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தச் சட்டங்களால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். ஆளுநா் மற்றும் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படும் அதிமுக எம்எல்ஏ அன்பழகனின் நயவஞ்சக அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும்.