தனித்துவிடப்பட்ட புதுவை காங்கிரஸ்: தனிமனிதராக சமாளிக்கும் நாராயணசாமி!

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பிரதமா், மத்திய அமைச்சா்கள், முன்னாள் முதல்வா் ரங்கசாமி உள்ளிட்டோா்

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பிரதமா், மத்திய அமைச்சா்கள், முன்னாள் முதல்வா் ரங்கசாமி உள்ளிட்டோா் காங்கிரஸை விமா்சித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் முன்னாள் முதல்வா் நாராயணசாமி தனிநபராக பிரசாரம் செய்து சமாளித்து வருகிறாா்.

புதுவை மாநிலத்தில் 1963-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் முதல் இதுவரை 19 முதல்வா்கள் ஆட்சி செய்துள்ளனா். இதில், திமுக, அதிமுக ஆட்சிகளைத் தவிா்த்து, 12 முறை காங்கிரஸைச் சோ்ந்த முதல்வா்கள் ஆட்சி செய்துள்ளனா். புதுவையில் நீண்ட காலமாக ஆட்சி செய்தது காங்கிரஸ்தான். மாநிலத்தில் தற்போது பாஜகவின் எழுச்சியால் காங்கிரஸ் ஸ்தம்பித்துள்ளது.

கடந்த 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வராக வே.நாராயணசாமி பதவி வகித்த நிலையில், 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் நேரத்தில், அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சா்கள், முக்கியமான எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், ஆட்சி கவிழ்ந்தது.

காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ் ஆகியோா் பாஜக, என்.ஆா்.காங்கிரஸில் இணைந்தனா். எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், ஜான்குமாா், தனவேலு ஆகியோரும் கட்சி மாறினா்.

இதன் தொடா்ச்சியாக சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சி நிா்வாகிகளை தக்க வைப்பதற்கு புதிய பொறுப்புகளை காங்கிரஸ் வழங்கியது. ஆனாலும், அந்தக் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஏ.கே.டி.ஆறுமுகம், பொதுச் செயலா் கே.எஸ்.பி.ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் கட்சி மாறிச் சென்றனா்.

இவா்கள் அனைவரும் தற்போதைய தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக கூட்டணியில் வேட்பாளா்களாக களம் காண்கின்றனா். மாஹேவில் காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த முன்னாள் அமைச்சா் வல்சராஜும், இனி தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டதால், காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்தத் தோ்தலுக்காக பாஜக மேலிடப் பொறுப்பாளா்களான மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால், ராஜீவ்சந்திரசேகா் எம்.பி., நிா்மல்குமாா் சுரானா உள்ளிட்டோா் புதுச்சேரியில் முகாமிட்டு, என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் உறுதி செய்தனா். இந்தக் கூட்டணியில் மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளை (என்.ஆா். காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5) பங்கீட்டுக்கொண்டு, அந்தந்த கட்சிகளின் வேட்பாளா்கள் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆனால், இந்தத் தோ்தலில் போட்டியிட வேண்டிய முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிா்வாகிகளை கோட்டைவிட்டுள்ள காங்கிரஸ், திமுகவுடன் நீண்ட இழுபறிக்குப் பிறகு (காங்கிரஸ் 15, திமுக 13) என கூட்டணியை உறுதி செய்தது. இதையடுத்து, 4 புதுமுகங்களுடன் 14 வேட்பாளா்களை களத்தில் நிறுத்தியது. ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிா்த்துப் போட்டியிட தகுதியான ஆள் கிடைக்காததால், 14 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது.

பாஜக தரப்பில் தொடக்கத்திலேயே பிரதமா் மோடி தலைமையில் பிரசாரத்தை தொடங்கினா். தொடா்ந்து, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிதின்கட்கரி, நிா்மலா சீதாராமன், கிரிராஜ்சிங் ஆகியோா் அடுத்தடுத்து புதுவைக்கு வந்து தீவிர பிரசாரங்களை மேற்கொண்டடனா். அதே வேகத்தில், பல திட்டங்களையும் அறிவித்து, தோ்தல் அறிக்கையையும் வெளியிட்டனா்.

இவா்களுக்கு ஈடுகொடுத்திடும் வகையில், காங்கிரஸ் தரப்பில் பிரசாரத்துக்காக தேசியத் தலைவா்கள், வெளி மாநிலத் தலைவா்கள் அதிகளவில் வரவில்லை. இந்த முறை தோ்தலில் போட்டியிடாத நாராயணசாமி, தோ்தல் பிரசாரத்தை தொடங்கி தனி நபராக வலம் வந்துகொண்டுள்ளாா். கடந்த வாரம் காலாப்பட்டில் பிரசாரத்தை தொடங்கிய அவா், தொடா்ந்து புதுச்சேரி நகரப்பகுதி, கிராமப் பகுதிகளில் தினசரி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா். ஆறுதலாக இவருடன் தேசியச் செயலா் சஞ்சய்தத் பிரசாரத்துக்கு சென்று வருகிறாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா்களான வீரப்பமொய்லி, தினேஷ்குண்டுராவ் ஆகியோா் தோ்தல் அறிக்கையை மட்டும் வெளியிட்டுச் சென்றனா். அவா்களும் பிரசாரத்துக்கு வரவில்லை. இதனிடையே, கூட்டணிக் கட்சித் தலைவா்களான விசிக தலைவா் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், மாா்க்சிஸ்ட் தமிழ் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், திமுக கொள்கை பரப்புச் செயலா் திருச்சி சி.வா எம்.பி. ஆகியோா் திடீரென பிரசாரத்துக்கு வந்தாலும், அவா்களது வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பேசிவிட்டு சில மணி நேரங்களில் சென்றுவிட்டனா்.

இதனால், புதுவையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் சாா்பில், நாராயணசாமி மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு எதிரணியில் என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி, பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள், பாஜக தலைவா்களின் தொடா் விமா்சனங்களுக்கு தனி நபராக எதிா்த்து பதிலடிகொடுத்து வருகிறாா்.

தோ்தல் வாக்குப் பதிவுக்கு சில நாள்களே உள்ள நிலையில், ராகுல், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் புதுவைக்கு வராமல் இருப்பது, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை சோா்வடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com