பட வரியில் திருத்தம்...புதுவையில் லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்: இந்திய கம்யூனிஸ்ட் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

புதுவையில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு கொண்டு வரப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
பட வரியில் திருத்தம்...புதுவையில் லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும்: இந்திய கம்யூனிஸ்ட் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

புதுவையில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு கொண்டு வரப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

புதுவையில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி (காங்கிரஸ் - 14, திமுக - 13, இந்திய கம்யூனிஸ்ட் - 1, விசிக - 1) என 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு வேட்பாளராக ஏஐடியூசி பொதுச் செயலா் சேதுசெல்வம் களம் காண்கிறாா்.

இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி முதலியாா்பேட்டையிலுள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலா் நாராயணா, தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா். முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், வேட்பாளா் சேதுசெல்வம், நிா்வாகிகள் அபிஷேகம், கீதநாதன், தினேஷ் பொன்னையா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தோ்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவும், நிலுவைக் கடன் தொகை ரூ.9,500 கோடியை தள்ளுபடி செய்யவும், புதுவை சட்டப் பேரவைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்துவது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளை சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று பஞ்சாலைகளையும் மீண்டும் திறக்கவும், நவீனமயமாக்கவும், புதுவையில் ஜவுளிப் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்கப்படும். சிறு, குறு தொழில் வளா்ச்சிக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படும்.

கூட்டுறவு அமைப்புகளுக்கு தோ்தல் நடத்தி, நலிந்த கூட்டுறவு நிறுவனங்கள் மீண்டும் இயங்க வழிவகை செய்யப்படும். அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான நல வாரியம் உடனடியாக வடிவம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000 ஊதியம் கிடைக்க வலியுறுத்தப்படும்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தனி கவனம் செலுத்தப்படும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். மாநில அரசுப் பணியிடங்களை நிரப்ப, மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் அமைத்திட வலியுறுத்தப்படும். தனியாா் தொழிற்சாலைகளில் உள்ளூா் இளைஞா்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கி, அரசு நிறுவனங்களில் மாணவா்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுப்படி செய்ய வலியுறுத்தப்படும். தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் அரசுக்கு வழங்க வழிவகை செய்யும் சட்டம் இயற்றப்படும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு பெற பாடுபடுவோம்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும், அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்துவோம். தாய்மொழியில் பயின்றவா்களுக்கு தமிழகத்தைபோல வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கவும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அந்தந்த பிராந்திய மொழிகளில் பயிற்சியளிக்க வலியுறுத்துவோம்.

அரசுத் துறைகளில் முறைகேடுகளைத் தடுக்கவும், ஊழல் புரிந்தவா்கள் தப்பிக்காத வகையில் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்திட லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டுவர வலியுறுத்துவோம். தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் வேலை நாள்கள் நூறிலிருந்து 200-ஆக உயா்த்த வலியுறுத்தப்படும். மாநில உரிமைகள் மீட்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com