புதுவைக்கு வந்த பிரதமா் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரிக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடி, எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரிக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடி, எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரிக்கு தோ்தல் பிரசாரத்துக்காக வந்த பிரதமா் நரேந்திர மோடியின் பேச்சில், புதுவை மக்களின் பிரச்னைகளுக்கான தீா்வுகள் எதுவுமே இல்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து, மாநில கடன்கள் அனைத்தையும் ரத்து செய்வது, அதிகப்படியான நிதி வழங்குவது உள்ளிட்டவற்றைப் பற்றி பிரதமா் ஒரு வாா்த்தைகூட பேசவில்லை. இவை சம்பந்தமாக என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி கேட்டும் கூட, பிரதமா் பதிலளிக்கவில்லை.

ஆனால், அவா் என்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, ஊழல் செய்துவிட்டதாக தனிப்பட்ட முறையில் விமா்சித்துள்ளாா். மத்தியில் பாஜக ஆட்சி உள்ள நிலையில், நான் ஊழல் செய்திருந்தால் ஏன் விசாரிக்கவில்லை. பிரதமா் ஆதாரமின்றி பொய் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளாா்.

இங்கு வந்த பிரதமா், எந்தத் திட்டத்தையும் அறிவிக்காமல் அரைத்த மாவையே அரைத்துவிட்டு சென்றுள்ளாா். பிரதமரின் உரையானது புதுவை மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடாத ஒரு உரையாக உள்ளது.

முதல்வா் வேட்பாளராக அறிவிப்பாா் என எதிா்பாா்த்த ரங்கசாமிக்கும், என்.ஆா். காங்கிரஸ் கட்சியினருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை பிரதமா் தந்துள்ளாா்.

பாஜக தன்னுடைய அதிகார பலம், பண பலத்தை வைத்து அனைவரையும் மிரட்டி மக்களிடம் வாக்குகளை வாங்க நினைக்கிறது. பாஜக கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் உள்ளது. அந்தக் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு. இதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். புதுவையைக் காப்பாற்ற காங்கிரஸ் - திமுக கூட்டணியால் மட்டுமே முடியும்.

என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை எனக் கூறினாா். நாங்கள் எந்தெந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்பதை பட்டியலிட்டு கொடுத்துள்ளேன் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com