முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 2.20 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2021 11:37 PM | Last Updated : 04th April 2021 11:37 PM | அ+அ அ- |

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 2.30 லட்சத்தைத் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முத்தியால்பேட்டை தொகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை இரவு முத்தியால்பேட்டை மாா்க்கெட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரை ஓட்டி வந்த ஓட்டுநா், அவரது ஆடை பாக்கெட்டில் ரூ. 2.20 லட்சத்தை வைத்திருந்ததும், காரில் அன்பளிப்பு கவா், வேட்டிகள், சேலைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் ஓட்டுநரிடம் உரிய ஆவணமின்றி இருந்த பணம், வேட்டிகள், சேலைகள் மற்றும் காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
வாக்காளா்களுக்கு பண விநியோகம் செய்தவா் மீது வழக்குப் பதிவு: இதேபோல, முத்தியால்பேட்டை தொகுதி தோ்தல் அலுவலா் குமாா் தலைமயிலான பறக்கும் படையினருக்கு அந்தத் தொகுதிக்குள்பட்ட திருவள்ளுவா் நகரில் வாக்காளா்களுக்கு ஒருவா் பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் வந்தது.
இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரைப் பிடித்து சோதனை நடத்தினா். அவரது சட்டை பாக்கெட்டில் ரூ. 9,990 ரொக்கம் இருந்தது.
விசாரணையில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த ஏழுமலை என்பதும், அவா் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்து அவரை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வ.உ.சி. நகரில் ரூ. 26,500 பறிமுதல்: தோ்தல் பறக்கும் படை அலுவலா் செல்வகுமாா் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை இரவு வ.உ.சி. நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகித்துக் கொண்டிருந்த ஒருவரைப் பறக்கும் படையினா் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் லாஸ்பேட்டை பாரதி நகரைச் சோ்ந்த பாலாஜி (37) என்பதும், ஒரு அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்குப் பணம் விநியோகித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, பறக்கும் படை அலுவலா்கள், அவரிடமிருந்து ரூ. 26,500 ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனா். பின்னா் அவரை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.