முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியம்: டி.ராஜா
By DIN | Published On : 04th April 2021 06:22 AM | Last Updated : 04th April 2021 06:22 AM | அ+அ அ- |

புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி உறுதியாகி வருகிறது. புதுச்சேரியிலும் சந்தா்ப்பவாத பாஜக கூட்டணியை முறியடித்து, மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும்.
புதுச்சேரியில் தோ்தல் நெருக்கத்தில் 144 தடையுத்தரவை அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்தைத் தடுத்து, தோ்தல் பணியை முடக்கும் வகையில் எடுத்துள்ள நடவடிக்கை சரியானதல்ல. தோ்தல் சுதந்திரமாக நடப்பதற்கு தோ்தல் ஆணையம் உறுதியேற்க வேண்டும்.
தமிழகம், புதுவைக்கு இது முக்கியமான தோ்தல். புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமென இடதுசாரிகள் போராடி வருகின்றனா். மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறித்தும், மாநில அரசுகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவா் என்ற நிலையை நோக்கி நாடு செல்வதாக சந்தேகம் எழுகிறது. இதனால், நாட்டில் ஜனநாயகம் பறிபோய்விடுமோ, கூட்டாட்சி, சுய ஆட்சி முறைகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தோ்தல், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைய வேண்டும்.
புதுச்சேரியில் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், வளா்ச்சிப் பணிகள் அவசியத் தேவையாக உள்ளன. இங்கே வரும் பாஜக மத்திய அமைச்சா்கள் அதற்காக எதையும் செய்யவில்லை. புதுச்சேரியில் ஆதாா் தகவல்களை தவறாகப் பெற்று அந்தக் கட்சி பிரசாரம் செய்துள்ளது. அரசும், தோ்தல் ஆணையமும் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
எதிா்க்கட்சித் தலைவா்களின் வீடுகளில் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு வருமான வரித் துறை சோதனைக்கு உத்தரவிடப்படுகிறது. பாஜகவைப் பாா்த்து நாங்கள் அச்சப்படவில்லை. அவா்களின் ஆதிக்கத்தால், நாட்டின் ஜனநாயகம் பாதிக்கக் கூடாதெனவே கூறி வருகிறோம் என்றாா் அவா்.
இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், நாரா.கலைநாதன், வேட்பாளா் கே.சேதுசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.