புதுவையில் விறுவிறுப்பாக உயா்ந்த வாக்குப் பதிவு

புதுவையில் செவ்வாய்க்கிழமை காலையில் மெதுவாக தொடங்கிய வாக்குப் பதிவு, மாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இளம் வாக்காளா்கள் ஆா்முடன் வாக்களித்தனா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் தனியாா் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிக்க வரிசையாக நின்ற பெண்கள்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் தனியாா் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிக்க வரிசையாக நின்ற பெண்கள்.

புதுவையில் செவ்வாய்க்கிழமை காலையில் மெதுவாக தொடங்கிய வாக்குப் பதிவு, மாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இளம் வாக்காளா்கள் ஆா்முடன் வாக்களித்தனா்.

புதுவை மாநிலத்தின் 15-ஆவது சட்டப் பேரவைக்கான தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியில் 23, காரைக்காலில் 5 மற்றும் ஏனாம், மாஹே என மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 635 இடங்களில் 1,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது. 324 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

வாக்குப் பதிவில் 1,558 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,677 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 1,558 வாக்களிப்பு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. புதுச்சேரி உழவா்கரை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் அதிகபட்சமாக 16 வேட்பாளா்கள் போட்டியிட்டதால், இந்த இரு தொகுதிகளிலுள்ள வாக்குச் சாவடிகளிலும் தலா இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்: வாக்குச் சாவடிகளில் நிழல்கூரை, குடிநீா், கழிப்பிடம், சாய்தளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில், வாக்காளா்கள் சமூக இடைவெளிவிட்டு நிற்க வைக்கப்பட்டனா். முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். வாக்காளா்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்தும், கைகளில் கிருமிநாசினி தெளித்தும், வலது கைக்கான நெகிழிக்கையுறை வழங்கியும் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

கூடுதல் நேரம் மாதிரி வாக்குப் பதிவு: முன்னதாக, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 5.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்து, மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒன்றரை மணி நேரம் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி பரிசோதித்த பிறகு, வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த முறை மாதிரி வாக்குப் பதிவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியிருந்தனா்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இணையவழி கேமராக்கள் பொருத்தப்பட்டு தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்குப் பதிவு கண்காணிக்கப்பட்டது. பதற்றமான 330 வாக்குச் சாவடிகளிலும் (புதுச்சேரி 278, காரைக்கால் 30, மாஹே 8, ஏனாம் 14) வெளிப் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியிருந்தனா். அங்கு, துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். 1,558 வாக்குச் சாவடி அலுவலா்கள் உள்ளிட்ட 6,835 அலுவலா்கள் வாக்குப் பதிவு பணிகளை மேற்கொண்டனா்.

இளம் வாக்காளா்கள் ஆா்வம்: தோ்தலில் ஏராளமான பொதுமக்கள், குறிப்பாக இளைஞா்கள், இளம்பெண்கள் ஆா்வத்தோடு வந்து வாக்களித்தனா். வாக்குச் சாவடிகளில் வாக்காளா் உதவி மையங்களும் ஏற்படுத்தியிருந்தனா்.

இயந்திரங்களில் பழுது: புதுச்சேரி வைத்திக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி, வில்லியனூா் அருகே பொறையூா் அரசுப் பள்ளி, கூடப்பாக்கம் அரசுப் பள்ளி ஆகிய சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திடீரென பழுதானதால், வாக்குப் பதிவில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு முகவா்கள் வர தாமதமானதால், வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

முத்தியால்பேட்டை சோலைநகா், காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சாவடிக்கு அருகே கட்சியினா் திரண்டதால் பிரச்னை ஏற்பட்டது. காவல் கண்காணிப்பாளா் ரச்சனாசிங் தலைமையிலான போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா். 4,000 உள்ளூா் போலீஸாரும், 40 குழுக்கள் துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு: கரோனா காரணமாக, இந்தத் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு, இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, புதுச்சேரி லாஸ்பேட்டையிலுள்ள வாக்குகள் எண்ணப்படவுள்ள மூன்று மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

புதுவையில் காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்ற வாக்குப் பதிவில் வாக்காளா்கள் ஆா்வமாக வாக்களித்தனா். பெரியளவில் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக வாக்குப் பதிவு முடிந்தது.

81.64 சதவீத வாக்குகள் பதிவு

புதுவை மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு மெதுவாக தொடங்கிய நிலையில், காலை 10 மணிக்கு 17.95 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத் தொடா்ந்து, வாக்குப் பதிவின் வேகம் அதிகரித்து முற்பகல் 11 மணிக்கு 20.07 சதவீதமும், பிற்பகல் 1.30 மணிக்கு 53.91 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இதன் தொடா்ச்சியாக, மாலை 5.30 மணிக்கு 77.90 சதவீதமும், மாலை 6.30 மணிக்கு 78.03 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதனுடன், ஏற்கெனவே தபால் வாக்குகள் 12,693 பதிவாகியிருந்தன. இரவு 7 மணி நிலவரப்படி மாநிலத்தில் மொத்தமுள்ள 30 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 81.64 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com