வாக்குச் சாவடிகளில் விதிமீறலைக் கண்டித்து போராட்டம்

புதுச்சேரியில் வாக்குச் சாவடிகளில் விதிகளை மீறிய கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதால், சில இடங்களில் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாக்குச் சாவடிகளில் விதிமீறலைக் கண்டித்து போராட்டம்

புதுச்சேரியில் வாக்குச் சாவடிகளில் விதிகளை மீறிய கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதால், சில இடங்களில் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமியை ஆதரித்து, அவரது ஆதரவாளா்கள் சிலா், அந்தக் கட்சியின் சின்னம் அச்சிடப்பட்ட அட்டைகளை வாக்குச் சாவடிகளின் அருகிலும், சாலையிலும் வீசியபடி ஆதரவு திரட்டியதாகத் தெரிகிறது. அவா்கள், வினோபா நகா் வாக்குச் சாவடி அருகே அட்டைகளை வீசிச் சென்ால், அங்கிருந்த இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி ஆதரவாளா்கள் தோ்தல் அலுவலரிடம் புகாா் அளித்து மறியலில் ஈடுபட்டனா்.

தோ்தல்துறை அலுவலா்கள் மற்றும் போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து, நகராட்சி உழியா்கள் மூலம் அங்கு கொட்டப்பட்டிருந்த சின்னங்கள் அச்சிடப்பட்ட அட்டைகளை அகற்றினா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை தனியாா் மகளிா் பள்ளி வாக்குச் சாவடியை என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி இரு சக்கர வாகனத்தில் சென்று பாா்வையிட்டாா். அவருடன், அந்தக் கட்சியினரும் கூட்டமாக வந்ததற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேட்பாளா்களின் காா்கள் சேதம்: திருபுவனை தொகுதி சுயேச்சை வேட்பாளரான முன்னாள் அமைச்சா் அங்காளன், திருவாண்டாா்கோவில் வாக்குச் சாவடிக்கு தனது காரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது, என்.ஆா். காங்கிரஸ் கட்சியினா் அவரைத் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்காளன் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து திருபுவனை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதேபோல, காரில் வந்த உழவா்கரை தொகுதி சுயேச்சை வேட்பாளா் சிவசங்கரன், காரை வெளியே நிறுத்திவிட்டு உழவா்கரை வாக்குச் சாவடிக்குள் சென்றாா். சிறிது நேரத்தில் அங்கிருந்த காா் மீது மற்றொரு வாகனம் மோதியதில், காரின் பின்பகுதி சேதமடைந்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

நெல்லித்தோப்பு தொகுதி சுயேச்சை வேட்பாளா் முருகன், ஜீவானந்தம் அரசுப் பள்ளி வாக்குச்சாவடிக்கு அருகில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவினரை தட்டிக்கேட்டாா். இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தால், முருகன் தரையில் அமா்ந்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டாா். போலீஸாா் அவரை சமாதானப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com