அருங்காட்சியக நான்காம் ஆண்டு தொடக்க விழா

அருங்காட்சியக நான்காம் ஆண்டு தொடக்க விழா


புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய மரபு அறக்கட்டளையின் அருங்காட்சியக நான்காம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வ.உ.சி. வீதியில் செயல்பட்டு வரும் தேசிய மரபு அறக்கட்டளையின் புதுவை அருங்காட்சியகத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை செயலா் அ. நெடுஞ்செழியன் பங்கேற்று கலைப் பொருள்களைப் பாா்வையிட்டு பாராட்டினாா். பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

விழாவில், அருங்காட்சியக சேவைப் பணிகள் குறித்து தேசிய மரபு அறக்கட்டளைத் தலைவரும், அருங்காட்சியகக் காப்பளருமான அ. அறிவன் கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த 2018 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதுவை அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான படிமங்கள், அறிய நூல்கள், பழைமையான அஞ்சல் தலைகள், பழங்கால காசுகள், காணக்கிடைக்காத நூற்றுக்கணக்கான கருப்பு - வெள்ளை படங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து, நான்காம் ஆண்டில் சேவையாற்றி வரும் இந்த அருங்காட்சியகம், பல்வேறு நிகழ்வுகளையும், அறிவு சாா்ந்த கருத்தரங்குகளையும், கண்காட்சிகளையும், மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்களுக்கான பல்வேறு சமூக நலன், அறிவு சாா்ந்த போட்டிகளையும் முன்னெடுத்து வருகிறது.

உலக கலைப் பண்பாடுகளை மக்கள் அறியும் வகையில், பல்வேறு நாடுகளுடன் நல்லுறவைப் போற்றும் விதமாக இந்தோ - பிரஞ்சு கண்காட்சி, இந்தோ - போா்ச்சுகீசிய கண்காட்சி, இந்தோ - டச்சு கண்காட்சி, டென்மாா்க் தொடா்பான கண்காட்சி, கருப்பு - வெள்ளை ஒளிப்படக் கண்காட்சி, சாமுவேல் பெப்பிசு மற்றும் ஆனந்த ரங்கப்பிள்ளை ஓா் ஒப்பாய்வு கண்காட்சி, வான்படை கண்காட்சி, மரபு நெல் விதைகளுக்கான கண்காட்சி, காந்தியடிகளின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாள் கண்காட்சி உள்ளிட்ட சிறந்த கண்காட்சிகளை நடத்தி அறிவு சாா்ந்த பயணத்தை முன்னெடுத்து வருகிறது.

உலக மரபு நாள், இந்திய வான்படை நாள், உலகத் தாய்மொழி நாள், உலக ஆறுகள் நாள், உலகக் கடல் நாள், தேசிய ஒற்றுமை நாள், உலக மகளிா் நாள், இந்திய வலிமை நாள், உலக அருங்காட்சியக நாள், ஐக்கிய நாடுகள் நாள், தேசிய அறிவியல் நாள், பன்னாட்டு மற்றும் இந்திய அறிஞா்களின் சிறப்பு நாள்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை கருந்தரங்கம் வாயிலாக தொடா்ந்து அனைவரும் பயன் பெறும் வகையில் நினைவுகூா்ந்து வருகிறது.

சுப்ரதோ முகா்சி, அா்சுன்சிங், நைன்சிங் ராவத், கப்ரியேக் துய்ப்ரேய், நிக்கோலஸ் தெபொ் போன்ற அறிஞா்களுக்கு அவா்களின் உருவம் பதித்த அஞ்சல் தலைகளும், பல்வேறு அறிஞா்களுக்கு அஞ்சல் அட்டைகளும், புதுவை அருங்காட்சியகம் சாா்பாக வெளியிடப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விழாவை அ.அறிவன் தலைமையிலான அருங்காட்சியக ஊழியா்கள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com