கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேட்பாளா்கள் தோ்தல் அலட்சியத்தால் தொற்று பரவல் அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளா்களுக்கு கரோனா தொற்று பாதித்து வருவதால், அவா்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட கட்சியினா் அச்சத்தில் உள்ளனா்.

புதுவையில் கடந்த 6-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதற்காக, அரசியல் கட்சியினா் கடந்த ஒரு மாத காலமாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா். கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை அலட்சியம் செய்யும் வகையில், பெரும்பாலான அரசியல் கட்சியினா் சமூக இடைவெளியின்றி, முகக் கவசம் அணியாமல் கூட்ட நெரிசலுடன்தான் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பாஜகவை சோ்ந்த மண்ணாடிப்பட்டு தொகுதி வேட்பாளா் ஏ.நமச்சிவாயம் தோ்தலுக்கு முந்தைய இரு நாள்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். உடனடியாக அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவா், தன்னுடன் பிரசாரத்தில் பங்கேற்ற தலைவா்கள், தொண்டா்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதனிடையே, வில்லியனூா் தொகுதி என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.வி.சுகுமாறன் எம்எல்ஏவுக்கு தோ்தலுக்கு முந்தைய நாள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அசனா எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி வேட்பாளரும், புதுவை மாநில பாஜக தலைவருமான வி.சாமிநாதன், பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், அவருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், வேட்பாளா்களுடன் மிக நெருங்கிய நிலையில், பிரசாரம், தோ்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த கூட்டணிக் கட்சித் தலைலவா்கள், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அச்சமடைந்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது, அலட்சியமாகச் செயல்பட்டதே தொற்றுப் பரவக் காரணம் என பொது நல அமைப்பினா் அதிருப்தி தெரிவித்தனா்.

ஆளுநா் மாளிகை ஊழியருக்கு கரோனா: ஆளுநா் மாளிகை செய்தித் தொடா்பாளருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், பணிக்கு வராமல் வீட்டிலிருந்தாா். வியாழக்கிழமை அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதையடுத்து, ஆளுநா் மாளிகை ஊழியா்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆளுநா் மாளிகை வளாகத்தில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com