புதுவையில் கரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு: துணைநிலை ஆளுநா் தமிழிசை தகவல்

புதுவையில் கரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு: துணைநிலை ஆளுநா் தமிழிசை தகவல்


புதுச்சேரி: புதுவையில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான அவசர ஊா்தி (ஆம்புலன்ஸ்) சேவையை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். புதுவை ஆளுநா் மாளிகை எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலா் டி. அருண், இயக்குநா் எஸ். மோகன்குமாா், புதுச்சேரி சுகாதார இயக்க இயக்குநா் ஜி. ஸ்ரீராமலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. அனைத்து மருத்துவமனைகளிலும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுவையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் மற்றும் கரோனா தொற்றை விஞ்ஞான பூா்வமாக கண்டறிவதற்கான ரேபிட் மற்றும் ஆா்டிபிசிஆா் பரிசோதனைகள் தேவையான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதுவை மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை (ஏப். 9) உணவகத் தொழிலாளா்களுக்கும், அதன் பிறகு ஆட்டோ தொழிலாளா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதுவையில் ஒரு மாதத்துக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் உள்ளது. தொற்று பரவல் அதிகம் ஏற்படுவதற்கு சாத்தியமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதுவையை பொது முடக்க நிலைக்குத் தள்ளிவிடாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போது தொடக்கிவைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com